கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு.. தடயங்களை திரட்ட 11 மணி நேரமா?: மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!!

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட தகவல் போலீசுக்கு கிடைத்த பின் 11 மணி நேரம் என்ன நடந்தது? என மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை பெண் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதிகேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார். அதன்பின் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட தகவல் போலீசுக்கு கிடைத்த பின் 11 மணி நேரம் என்ன நடந்தது. மேற்கு வங்க போலீஸ் பின்பற்றிய நடைமுறையை தனது 30 ஆண்டுகால அனுபவத்தில் கண்டதில்லை. பெண் மருத்துவர் கொலையை சந்தேக மரணம் என்று காலை 10.30 மணிக்கு பதிவுசெய்துள்ளனர். மருத்துவம் சாரா கண்காணிப்பாளரா? யார் அது?; அந்த பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவம் சாரா கண்காணிப்பாளருக்கு என்ன வேலை? என்று – நீதிபதி பர்திவாலா கேள்வி எழுப்பினார்.

வழக்கு பதியும் முன்பே உடற்கூறாய்வா?: நீதிபதி
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக வழக்கு பதியும் முன்பே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது எப்படி?. சந்தேக மரணம் என்று வழக்கு பதியும் முன்பே உடற்கூறாய்வு நடத்தப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. ஆக.9-ம் தேதி காலையில் போலீஸ் டைரியில் பெண் மருத்துவர் கொலை பற்றி குறிப்பு பதியப்பட்டு உள்ளது. எனினும் இரவு 11.45 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உண்மைதானா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், சந்தேக மரணம் யுடி 861/24 என்று வழக்கு பதியப்பட்ட நேரம் என்ன என்று வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பகல் 1.46 மணிக்கு சந்தேக மரணம் என்று வழக்கு பதியப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பதில் அளித்தார். எந்த அடிப்படையில் வழக்கு பதியப்பட்ட நேரத்தை கூறுகிறீர்கள் என்று கபில் சிபலிடம் நீதிபதி பர்திவாலா கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு விசாரணையின்போது பொறுப்பான போலீஸ் அதிகாரியை உடன் வைத்துக் கொள்ள கபில் சிபலுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தடயங்களை திரட்ட 11 மணி நேரமா?: நீதிபதி கேள்வி
காலை 10.10 மணிக்கு கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை பற்றி போலீஸ் பொது டைரியில் குறிப்பு பதியப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தை போலீஸ் தன் கட்டுப்பாட்டில் இரவு 11.30 மணிக்குத்தான் கொண்டு வந்துள்ளது. காலை 10.10 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை என்ன நடந்தது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி