கொளப்பள்ளி ஏலமன்னா பகுதியில் காட்டு யானை அட்டகாசம்; மளிகை கடையை சூறையாடியது

பந்தலூர் : பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஏலமன்னா பகுதியில் மளிகைக்கடையை உடைத்து காட்டு யானை சூறையாடியது.நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றிகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஏலமன்னா குடியிருப்பு பகுதியில் 6 காட்டு யானைகள் புகுந்தன.

அதில் ஒரு யானை அப்பகுதியில் வசித்துவரும் வடமலை என்பவரது மளிகைக்கடையின் ஷட்டர் மற்றும் ஒரு பக்கவாட்டு சுவரை உடைத்து சேதம் செய்து உள்ளே இருந்த அரிசி, வாழைப்பழம், வாழைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை தும்பிக்கையால் எடுத்து தின்றும், சிதறியும் சேதப்படுத்தியது. காட்டுயானை கடையை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் குடியிருந்து வரும் கடை உரிமையாளர் வடமலை சத்தமிட்டுள்ளார். அதன்பின் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.

இது குறித்து வடமலை கூறுகையில், ‘‘அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு காரணமாக யானைகள் ஊருக்குள் வருவது தெரிவதில்லை. நேற்று முன்தினமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் யானை நடமாட்டம் குறித்து தெரியவில்லை’’ என்றார். குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஏலமன்னா பகுதியில் செயல்பட்டு வரும் சிடிஆர்டி அறக்கட்டளை சார்பில் சோலார் மின்விளக்கு பொருத்தப்பட்டது. சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு பிதர்காடு வனச்சரக வனவர் பெல்லிக்ஸ் மற்றும் வனத்துறையினர் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர். காட்டு யானைகளிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்

ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த ஒன்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு

குடிமகன்களுக்கு கொண்டாட்டம் ஆந்திராவில் மது விலை குறைப்பு