கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் உருவ சிலை அமைக்க பூமி பூஜை: ஆகஸ்ட்டில் திறக்கப்படும் என சசிகலா பேட்டி

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டுக்கு 8 ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சசிகலா நேற்று முன்தினம் மாலை வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவர் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களை பார்க்கவும், ஜெயலலிதாவுக்கு சிலை மற்றும் மணிமண்டபம் கட்ட பூமி பூஜை செய்வதற்காகவும் வந்துள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள காட்சி முனைக்கு செல்லும் பிரதான சாலை அருகே 10 நம்பர் நுழைவு வாயில் பகுதியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பதற்கும், மணி மண்டபம் கட்டுவதற்கும் பூமி பூஜை நடந்தது. இதில் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பூமிபூஜைக்கு பின் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது: நான் இதுவரை ஜெயலலிதா இல்லாமல் கொடநாடு வந்ததில்லை. அதனால் எனக்கு ஒரு தயக்கம். நான் எப்படி அங்கு செல்வது என்பதால் இங்கு வராமல் இருந்தேன். குறிப்பாக இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் எங்கள் இருவரிடமும் அன்பாக பழகுவார்கள். ஜெயலலிதா அவர்களை தொழிலாளர்கள் என நினைத்ததில்லை. அவர்களும் நினைத்ததில்லை. இங்கு வரும் போதெல்லாம் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்துக்கே சென்று அவர்களிடம் சகஜமாக பழகி உள்ளார். ஒரு குடும்ப பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் கொடநாடு வந்தால் ஜெயலலிதா அப்படித்தான் இருப்பார்.

கொடநாடு அவருக்கு ரொம்ப பிடித்த இடம் என்பதால் சாஸ்திரம் மற்றும் வாஸ்துபடி, இந்த இடத்தை தேர்வு செய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலை நிறுவி, மணி மண்டபம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது. குறிப்பாக கொடநாடு காட்சி முனை சுற்றுலாத்தலமாக இருப்பதால் அனைத்து மக்களும் வந்து பார்த்து செல்லும் அளவிற்கு அமைக்கப்படும். அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் சிலை மற்றும் மணி மண்டபம் திறக்கப்படும். இவ்வாறு சசிகலா கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு