கொடநாடு விஷயத்துல நடுங்கிப் போயிருக்கும் இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘கடத்தல் குறித்து சொன்னா சம்பந்தப்பட்ட கும்பலுக்கே ஆபீசர்ஸ் மூலம் தகவல் பறக்குதாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திம்மாம்பேட்டை பகுதிகளை ஒட்டிய வனச்சாலையைத்தான் வாகன ஓட்டிங்க பிரதான சாலையாக பயன்படுத்தி வர்றாங்க.. இந்த வழியாகத்தான் தமிழ்நாட்டுல இருந்து ரேஷன் ரைஸ் கடத்துறாங்களாம்.. அதுக்காக மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல ரேஷன் ரைஸ் குறைந்த விலைக்கு வாங்கி, வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்ல சந்தேகமில்லாத வீடுகள்ல சேமித்து வெச்சி டன் கணக்குல லாரிகள்ல ஆந்திராவுக்கு கடத்துறாங்களாம்.. இந்த அரிசி கடத்தல் தொடர்புடைய சமூக விரோத கும்பலுக்கும் சம்பந்தப்பட்ட வழங்கல் ஆபிசர்களுக்கும் இடையே லிங்க் இருக்குறதாக புகார்கள் எழுந்திருக்குது.. கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு யார் தகவல் சொன்னதுன்னு அதையும் கடத்தல் கும்பலுக்கு போட்டுக் கொடுத்துடுறதனால அந்த கும்பல் ஜனங்களுக்கு மிரட்டல் விடுக்குறாங்களாம்.. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ரைஸ் கடத்தலை தடுக்கணும், அதோட கடத்தல் கும்பலோட தொடர்புல இருக்குற ஆபிசர்ஸ் மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வளர்ச்சிப் பணிகளை கவனிக்காத யூனியன் தலைவர், துணைத் தலைவர் மேல கவுன்சிலர்கள் எல்லாம் அதிருப்தியில இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வட மாநில நதி பெயர் கொண்ட மாவட்டத்தில் கோயில் பெயர் கொண்ட யூனியன் தலைவராக இலைக்கட்சியை சேர்ந்தவரும், துணைத்தலைவராக மலராத கட்சியை சேர்ந்தவரும் இருக்காங்க.. இவர்கள், யூனியனில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதற்கு பொது நிதியை பயன்படுத்தக்கூடாதுனு விநோதமான போராட்டம் நடத்தினாங்க.. இதனால, அலுவல் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு செய்றாங்கன்னு அலுவலர்களும் பதிலுக்கு போராட்டம் நடத்தினாங்களாம்.. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் வளர்ச்சிப்பணிகளை செய்யாமல் இப்படி தொடர்ந்து தேவையற்ற குழப்பம் ஏற்படுத்துவதே தலைவர், துணைத் தலைவருக்கு வேலையா போச்சுன்னு மற்ற கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இந்த யூனியன் தலைவர் கடந்த ஆண்டு கான்ட்ராக்டர்களிடம் வசூல் நடத்தி, அந்த லிஸ்ட்டுடன் யூனியன் அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் சிக்கிய வழக்கு நடந்துகிட்டு இருப்பதுதான் இதில் சுவாரஸ்யமே…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொடநாடு என்றால் மட்டும் கொஞ்சம் நடுக்கமாமே யாருக்கு..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரின் நீண்டகால நண்பராகவும், நிழலாகவும் இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் நகமும் சதையும்போல பிரிக்க முடியாத சக்தியாக இருந்த நிலையில் ரெண்டு பேருக்கும் இடையே பிரிவு ஒண்ணு விழுந்திருக்காம்.. அவரது கண் அசைவில் எல்லா வேலையையும் கனகச்சிதமாக முடிப்பதிலும் கெட்டிக்காரராக இருந்தாராம்.. அவரது நட்புக்கு அடையாளமாக இலைக்கட்சி தலைவரின் மா.செ. பதவியை கொடுத்து அழகு பார்த்தாராம்.. இந்நிலையில் யார் கண்பட்டதோ தெரியல. ரெண்டு பேருக்கும் இடைவெளி அதிகமாகி போச்சாம்.. இலைக்கட்சி தலைவர் சேலத்திலேயே இருந்தாலும் கடமைக்காக ஒருமுறை பார்ப்பதோடு சரியாம்.. அதன்பிறகு அவரது வீட்டுப்பக்கமே நிழலானவரு போகாம இருக்காராம்.. இதற்கு ஏராளமான காரணங்களை இலைக்கட்சி தொண்டர்கள் அடுக்கிக்கிட்டே போறாங்க.. அதுல மலராத கட்சி கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அப்படியே வெளியே வந்துவிட்டால் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் எனவும் இலைக்கட்சி தலைவரிடம் கூறியதாக சொல்றாங்க.. அதுவும் நிழலானவரு சின்னமம்மியை கட்சியில சேர்க்கணுமுன்னு ரொம்ப ஆசைப்படுறாராம்.. இதுபோல இலைக்கட்சி தலைவருக்கு எதிரான கருத்துகளை கொண்டுள்ளதால் கொஞ்சம் ஒதுக்கி வச்சிருக்காராம்.. அப்படியானால் நிழலானவரு செஞ்சி வந்த வேலைய யார் செய்றாங்க என்கிற சந்தேகம் ஏற்படத்தான் செய்யும்.. அதையும் நிவர்த்தி செய்ய மூன்று பேர் களம் இறக்கப்பட்டிருக்காங்களாம்.. இலைக்கட்சியாரின் சன், மைத்துனர் மற்றும் நெருங்கிய உறவுக்காரர் ஒருவராம்.. இவர்கள் களத்தில் இறங்கி செய்யவேண்டியதை கச்சிதமா செய்றாங்களாம்.. இதனால நிழல் பிரிவு இலைக்கட்சி தலைவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலையாம்.. என்றாலும் கொடநாடு மட்டும் கொஞ்சம் நடுக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருப்பதாக கட்சிக்காரர்கள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விஐபிக்களின் பிஏக்களுக்கு ‘1 சி’ கொடுத்து ஜம்ப் ஆன அதிகாரிக்கு சிக்கல்னு சொல்றாங்களே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டம் ‘சிம்ம’ பேரூராட்சியில், கடந்த 2020ம் ஆண்டு செயல் அலு வலராக பணிபுரிந்தவர் முழுமுதற் கடவுள் பெயர் கொண்டவரு.. இவர் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாரு.. பின்னர், கடந்த 2022ம் ஆண்டு கோவைக்கு இடமாறுதல் பெற்று வந்து, பொள்ளாச்சி ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்தார். தற்போது உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றுகிறாரு.. 8க்கும் மேற்பட்ட செயல் அலுவலர்கள் பணிமூப்பு அடிப்படையில் புரமோஷனுக்கு காத்திருக்கும் நிலையில் இவர், ‘ஜம்ப்’ ஆகி, இந்த பதவிக்கு வந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாம்.. இதற்காக, விஐபிக்களின் பி.ஏ.க்கள் 4 பேரிடம் ‘1 சி’ கொடுத்து, இந்த பதவியை யாசகம் பெற்றுள்ளாராம். இவர், கரூரில் செயல் அலுவலராக பணிபுரிந்தபோது வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திற்கு தேவையான டி.வி. உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் முறைகேடு செய்து, விஜிலென்ஸ் பிடியில் சிக்கி விட்டாராம்.. அதுதொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்காம்.. இவர், செயல் அலுவலர்கள் சங்கத்தில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்தபோது, கணக்கில்லாமல் கரன்சி குவித்து விட்டாராம்.. அந்த சர்ச்சையும் இன்னும் முடியவில்லை. அப்படி இருக்கும்போது, இவருக்கு உதவி இயக்குனர் புரமோஷன் வழங்கியது பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கு.. இவர் சார்ந்த துறையிலேயே கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறதாம்.. அதனால், விரைவில் விசாரணை வளையத்தில் சிக்குவார் என்கிறார்கள்…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!