கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கோடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக, சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் எஸ்பி குமாரவேல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் வழக்கு தொடர்பான 4 பக்க அறிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் ஊட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ், சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். இந்த வழக்கில் இதுவரை 189 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்கள் உள்ளிட்டதகவல் தொடர்பு ஆதாரங்கள் விரைவில் சமர்ப்பிக்கும் வகையில், விசாரணைக்கு கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இதனிடையே வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்களில் பதிவான தகவல்களை கேட்டு கோவை ஆய்வகத்திற்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடிதம் எழுதியது.8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகளில் பதிவான தகவல் பரிமாற்றங்களை, மூடி முத்திரையிட்டு வழங்க தெரிவிக்கப்பட்டது.

ஆய்வகத்தில் கிடைத்துள்ள விவரங்களை வழங்குமாறு சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கேட்டதன் அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டது. 4 பென் டிரைவ்களில் பதிவுசெய்து மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு. 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்து தகவல் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு