கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு செல்போன் தகவல்களை சேகரிக்க குஜராத் தடயவியல் குழு திருச்சி வந்தது

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் செல்போன் தகவல்களை சேகரிக்க குஜராத் தேசிய தடயவியல் குழுவினர் திருச்சி வந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், தொடர்புடையதாக போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி மறு விசாரணை செய்து வருகிறது. இதற்காக, 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் நேற்று முன்தினம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடந்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்து யார், யாரை தொடர்பு கொண்டார்கள்? என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க நினைத்தனர்.

அதன்படி, சம்பவம் நடந்த 2017ம் ஆண்டு சந்தேகப்படும்படியாக கிடைத்த 60 செல்போன் எண்கள் மற்றும் 19 செல்போன் டவர்களில் இருந்து பதிவான தகவல்களை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த தகவல்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில்தான் பதிவாகும். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்களை 2 ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கும் வசதி உள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். எனவே பதிவான தகவல்களை எடுத்து தரும்படி குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து நிபுணர்கள் குழுவை திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஜ் அலுவலகத்துக்கு அனுப்பி தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி செல்போன் அழைப்புகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 தடயவியல் நிபுணர்கள் மிஸ்ப்ரி, ஜாலா நேற்று திருச்சி வந்தனர். அவர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு நேரில் சென்று, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகி இருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்கிறார்கள். இவர்களுடன் ஏடிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசாரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி இன்று (3ம்தேதி) வரை நீடிக்கலாம் என தெரிகிறது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போனில் பேசிய தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி