கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ.வின் மற்றொரு கார் டிரைவரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை: சசிகலா சிறையில் இருந்து வந்ததும் கார்களை ஒப்படைத்து பணி விலகியதாக பேட்டி

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் மற்றொரு கார் டிரைவரிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக கைதாகி ஜாமீனில் உள்ள கனகராஜின் அண்ணன் தனபால், சிபிசிஐ விசாரணைக்கு ஆஜராகி பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெயலலிதாவின் மற்றொரு கார் டிரைவரான அய்யப்பனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து அவர் நேற்று காலை 10 மணிக்கு கோவை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜரானார். இவரிடம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொடநாடு பங்களாவுக்கு வந்த நபர்கள், அங்கிருந்த ஆவணங்கள் குறித்து விசாரித்தனர். அதிமுகவில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் யாராவது பங்களாவில் இருந்த ஆவணங்கள், ரகசியங்கள், ஆதாரங்களை பெற முயற்சி செய்தார்களா? போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர். மாலை 6 மணி வரை 8 மணி நேரம் விசாரணை நடந்தது. இதுகுறித்து டிரைவர் அய்யப்பன் அளித்த பேட்டி: ‘‘நான் 1991 முதல் 2021 வரை ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்த முறை ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். தற்போது கோவைக்கு வர சொன்னார்கள். ஜெயலலிதா இருக்கும்போது அடிக்கடி கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு சென்று வருவோம்.

ஆனால் இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலை எனக்கு தெரியாது. கனகராஜ் இரண்டு ஆண்டுகள் ஜெயலலிதாவின் கார் டிரைவராக வேலை செய்தபோது அவரை தெரியும். அரசியலில் நான் தலையிடவில்லை. ஜெயலலிதா இறந்து பின்னரும் நான் போயஸ் கார்டனில் பணியில் இருந்தேன். வழக்கில் கைதாகி சசிகலா சிறைக்கு சென்ற பின்னரும் நான் தான் கார்களை கவனித்து கொண்டேன். கொரோனா காலத்திற்கு பின்னர் சசிகலா சிறையில் இருந்து வந்ததும் கார்களை ஒப்படைத்து பணியில் இருந்து சொந்த காரணங்களால் விலகிவிட்டேன். நாங்கள் பங்களாவுக்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே சென்று வர முடியும். அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் கனகராஜுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததா? என தெரியவில்லை’’ என்றார்.

Related posts

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!