கொடநாடு கொலை வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு: ஊட்டி நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து ஊட்டி மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆண்டுகளாக இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 167 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணை வந்தது. சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிபதி அப்துல் காதர் முன்பு ஆஜராகினார். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்ஷீர் அலி ஆகியோரின் 8 செல்போன்களின் உரையாடல்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட 8 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை படித்து மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் சிபிசிஐடி போலீசார் தரப்பில் நீதிபதியிடம் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவ்வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு