கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு போயஸ் கார்டன் பூசாரி வங்கி மேலாளருக்கு சம்மன்: சிபிசிஐடி ஆபீசில் அக்.3ல் ஆஜராக உத்தரவு

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதுச்சேரி தனியார் வங்கி மேலாளர் மற்றும் போயஸ் கார்டனில் பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்தவருக்கு அக்.3ம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களாவில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட இதுவரை 316 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி தனியார் வங்கி மேலாளர் ஒருவரை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அக்.3ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ல் சசிகலா கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட்டுடன் கூடிய நிலத்தை வாங்க ஒப்பந்தம் செய்ததாகவும், அதற்காக புதுச்சேரி தனியார் வங்கியில் கடன் கேட்டது தொடர்பாகவும், அப்போது ரூ.50 கோடி வரை பழைய நோட்டுகள் மாற்றப்பட்டது குறித்தும் விசாரிக்க சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், சென்னை போயஸ் கார்டனில் சிறு வயது முதலே பூசாரியாக பணியாற்றி வந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் என்பவரையும் அக்.3ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை