கோடம்பாக்கம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள கோதண்டராமர் கோயில் குளம் ரூ.1.65 கோடியில் புனரமைப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கோதண்டராமர் கோயில் குளத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140, மேற்கு மாம்பலத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கோதண்டராமர் கோயில் உள்ளது. இதன் அருகே 14.0276 சதுர அடி (31 கிரவுண்ட் 276 சதுர அடி) பரப்பளவில் 350 அடி நீளம், 225 அடி அகலம் கொண்ட கோயில் குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆலய மேம்பாட்டு நிதி மற்றும் ஆணையர் பொதுநல நிதியில் இருந்து ரூ.24,96,064 செலவில் 29.10.1997ல் முன்னாள் முதல்வர் கலைஞரால் திருப்பணி துவங்கப்பட்டு 1998ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதன்பிறகு 7.5.2017ல் குளத்தை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் இணைந்து தூர்வாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று சென்னை மாநகராட்சி மூலம் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் 2020ம் ஆண்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோயில் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய வட்டாரம் துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழு தலைவர்கள், தனசேகரன், பாலவாக்கம் த.விசுவநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர்; நெருக்கடியான சூழ்நிலையில் அணியை மீட்டெடுத்தார்: விராட் கோலி பாராட்டு

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது : ஐகோர்ட்

பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிப்பு