கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பயன்படுத்தினால் ரூ.20 அபராதம்

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் இன்று முதல் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்தினால் ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: கொடைக்கானலுக்கு சீசன் மட்டுமின்றி தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் பல்வேறு மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்து வருகின்றனர்.

இதமான குளுமையும், இயற்கை எழிலும் நிரம்பிய கொடைக்கானல் மலையின் பசுமையை, சுற்றுச்சூழலை காக்க, நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா பசுமை கொடைக்கானலை உருவாக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுடன், அவற்றை பயன்படுத்தும், விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் ெகாடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 கிராம ஊராட்சிகளில் இன்று முதல் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் – குளிர்பான பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 அபராதம் விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!