முதல்முறையாக 10 நாட்கள் நடக்கிறது கொடைக்கானலில் மலர் கண்காட்சி: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இந்த ஆண்டுக்கான கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தமிழக அரசு துறை சார்பில் வேளாண்மை துறை செயலாளர் அபூர்வா நேற்று காலை துவங்கி வைத்து பார்வையிட்டார். இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சுமார் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி அரங்கில் சுமார் 2,500 வகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அரசு துறைகள் சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறும் பூங்காவில் தற்போது சுமார் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

சுற்றுலாப்பயணிகள் செல்பி, ரீல்ஸ் எடுத்து மகிழும் விதமாக முதல் முறையாக ‘360 டிகிரி டனல்’ என்ற புதிய செல்பி கருவியும் கண்காட்சி அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக 10 நாட்கள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மலர் கண்காட்சியில் நுழைவு கட்டணம் ரூ.30 ஆக இருந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெரியவர்களுக்கு ரூ.75, சிறுவர்களுக்கு ரூ.50 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கார் மீது லாரி கவிழ்ந்தது தம்பதி, குழந்தை தப்பினர்
கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தவர்கள் மீண்டும் நேற்று ஊருக்கு புறப்பட்டனர். கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் பண்ணைக்காடு பிரிவு அருகே மூலையாறு பகுதியில் வந்தபோது, கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டு இருந்த சரக்கு லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தம்பதி, குழந்தை எவ்வித காயமின்றி உயிர் தப்பினர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு