குவைத் கட்டட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் கொச்சி வந்தது!!

திருவனந்தபுரம் : குவைத் கட்டட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் விமானப்படை விமானம் கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 196 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 49 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் 45 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குவைத் தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடல்கள் உள்ளிட்ட 45 பேரின் உடல்களும் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. விமானத்தில் வந்த 31 பேரின் உடல்கள் மட்டும் இறக்கப்பட்டு மீதமுள்ள 14 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. தமிழர்கள் 7 பேர், கேரளாவை சேர்ந்த 23 பேர், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் என 31 உடல்கள் இறக்கப்பட்டன. 7 தமிழர்களின் உடல்களைப் பெறுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றுள்ளார். கேரளாவை சேர்ந்தவர்களின் உடல்களைப் பெறுவதற்காக அம்மாநில முதல்வர் பினராயி விமான நிலையம் வந்தடைந்தார். கேரள மாநில அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோரும் விமான நிலையம் வந்தனர் .தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

கொச்சி விமான நிலையத்திலிருந்து 7 தமிழர்களின் உடல்களும் ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊர் செல்கிறது. குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு (எ) கருப்பணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜூ எபினேசர், தஞ்சையை சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், கடலூரை சேர்ந்த சின்னதுரை, கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் வீராசாமி, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கரின் ஆகிய 7 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு