கொச்சி படப்பிடிப்பில் விபத்து கார் கவிழ்ந்து தமிழ் நடிகர் உள்பட 5 பேர் காயம்

திருவனந்தபுரம்: கொச்சியில் மலையாள படப்பிடிப்பின்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழில் நடித்த நடிகர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். மலையாளத்தில் ஜோ அன்ட் ஜோ, 18 பிளஸ் ஆகிய படங்களை இயக்கிய அருண் ஜோஸ் தற்போது நடிகர் அர்ஜுன் அசோகனை நாயகனாக வைத்து பிரொமான்ஸ் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கொச்சியில் வைத்து ஒரு கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் வில்லன்கள் செல்லும் வேறொரு காரை சேசிங் செய்வதுபோல காட்சிகளை படமாக்கப்பட்டது. கொச்சி எம்ஜி ரோட்டில் நடிகர்கள் இருந்த கார் வேகமாக சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

அதோடு மட்டுமல்லாமல் சாலையோரம் ஒரு பைக் அருகே நின்று கொண்டிருந்த சிலர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.

இதேபோல் கார் மோதியதில் பைக் அருகே நின்று கொண்டிருந்த மேலும் 2 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த நடிகர்கள் உள்பட 5 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. காயமடைந்த நடிகர்களில் மேத்யூ தாமஸ் தமிழில் லியோ படத்தில் நடிகர் விஜய்யின் மகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.