தெரிந்த கோயில்கள் தெரியாத நிகழ்வுகள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், 104-வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலில் உள்ள கோபுரம், ராமானுஜரால் புகழ் பெற்றது. இங்குதான் அவர் ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற மந்திரத்தை, நம்பி என்பவரிடம் உபதேசம் பெற்றார். அதை யாருக்கும் சொல்லித் தரக் கூடாது என்று சொல்லப்பட்டும், ராமானுஜர் உலக உயிர்கள் அனைத்தும் நாராயண மந்திரத்தைத் தெரிந்து கொண்டு, சகல வளங்களும் பெற்று, வைகுண்டம் அடைய வேண்டும் என்பதற்காக, இத்தல விமானத்தில் நின்று கொண்டு மக்களுக்கு ‘‘ஓம் நமோ நாராயணாய’’ மந்திரத்தை உபதேசித்தார். அவர் நின்ற இடத்தில், இந்த கோயிலில் அவருக்கு சிலை உள்ளது.

* 108 வைணவ திவ்ய தேசங்களில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், 101-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் பாடப் பெறும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாடல் இங்குதான் இயற்றப்பட்டது என்பது தனிச் சிறப்பு. இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்கே ஒரு முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெருமாள் கருட தரிசனத்தின்போது, அவருக்கு திருஷ்டி பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பெரியாழ்வார் பாடிய பாடல்தான் ‘‘பல்லாண்டு பல்லாண்டு’’ பாடல். இந்த பெருமைக்காக பெரியாழ்வாரை யானை மீது ஊர்வலமாக அனுப்பி வைத்தார் பாண்டிய மன்னன் வல்லபதேவன். அந்த நடைமுறை இன்றும் இங்கு தொடர்கிறது.

* விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தில் பனங்காட்டீஸ்வரர் சிவன்கோயில் உள்ளது. வேடன் ஒருவனால் வேட்டையாடப்பட்ட புறாவுக்காக தன் தசையை வெட்டிக் கொடுத்த சிபி மன்னனை இறைவன் தடுத்தாட்கொண்ட ஸ்தலம் இதுதான். அந்த நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதற்கு ஆதாரமாக கோயில் ராஜகோபுரத்தின் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் தூணில் இந்த காட்சி புடைப்புச் சிற்பமாக உள்ளது. இங்குள்ள சிவனை வழிபட, கண் தொடர்பான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

*அயோத்தி மன்னன் தசரதன் தனக்கு வாரிசு இல்லாமல் ஒரு முறை அதற்காக கடும் தவம் இருந்தார். அப்போது பெருமாளே அவர் முன் தோன்றி ‘‘நானே உனக்கு மூத்த மகனாக பிறப்பேன் என்றார்.’’ தசரதனுடைய மனக்கலக்கம் நீங்கி அவர் தெளிவு பெற்ற அந்த இடம் திருமலை திருப்பதி.

* சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில்தான் உலகிலேயே பிரதோஷ வழிபாடு முதன்முதலில் தோன்றியது. ஆதிபிரதோஷம் நடைபெற்ற இத்தலத்தில்தான் ‘‘சோமஸீத்தம்’’ எனப்படும் பிரத்தியேகமான பிரதோஷ பிரதட்சணம் தோன்றியதாம். பஞ்சவர்ண நவக்கிரக சந்நதி இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு.

* கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ளது திருவதிகை. இங்குள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில்தான் திருநாவுக்கரசருக்கு வந்த வயிற்று வலியை ஈசன் தீர்த்து வைத்தார். அதனால் எழுந்த மகிழ்ச்சியில் ‘‘அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!’’ என்ற பதிகத்தில் முதல் அடியை வீரட்டேஸ்வரர் முன்பு பாடினார். அதனால் அதுவே தேவாரப் பாடல் பெற்ற முதல் கோயிலானது. அதனால் திருநாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றார்.

*புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவுடையார் கோயில். இக்கோயிலை சமயகுரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் கட்டினார். அவர் மதுரையில் வரகுண பாண்டியனிடம் அமைச்சராக இருந்தபோது, குதிரை வாங்க கொடுத்த பணத்தை கொண்டு இக்கோயிலை கட்டிவிட்டார். இந்த கோயிலில் லிங்கம் கிடையாது. சிவபெருமான் அரூபவடிவத்தில் இருப்பதாக ஐதீகம். இங்கு காட்டப்படும் தீபாராதனையை தொட்டு வணங்கக்கூடாது. அந்த ஜோதியில் மாணிக்கவாசகர்
ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.

*திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தை நோக்கி முருகனைக் காணும் ஆவலில் நடக்க ஆரம்பித்தார் அருணகிரிநாதர். மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது பக்திப் பரவசத்துடன் மனமுருகி ‘‘மணிரெங்கு’’ என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாட ஆரம்பித்தார். அவர் பாடி முடித்ததும் முருகனும் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் பாலித்தார். அப்போது அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்புதான் ‘‘திருப்புகழ்.’’

*சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படித்து மகிழும் ‘‘வேதாளமும் விக்கிரமாதித்தனும்’’ கதை நடந்த இடம். திருச்சி சமயபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாகாளிக்குடி உஜ்ஜைனி ஓம் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்த சவுபாக்கிய சுந்தரி சிவன்கோயிலில் தான் வேதாளம் முருங்கை மரத்தில் தொங்கியதாக வரலாறு. இங்கு வேதாளத்திற்கு சந்நதி உள்ளது. இது வேறு எங்குமில்லாதது.

*சூரிய பகவானை வழிபடும் மந்திரமான காயத்ரி மந்திரத்தை உருவாக்கியவர், விஸ்வாமித்திரர். இதனை ஒரு தைப் பொங்கல் நாளில் கும்பகோணம் பட்டீஸ்வரர் கோயில் இருந்துதான்
உருவாக்கினர்.

*உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் மனமுருகிப் பாடப்படும் ‘‘கந்த சஷ்டி கவசத்தை’’ இயற்றியவர் பால தேவராய சுவாமிகள். இதை முருகன் அருளால் உணர்ந்து இயற்றி அதை அரங்கேற்றம் செய்த இடம். தாராபுரம் – ஈரோடு சாலையில் உள்ள சென்னிமலை முருகன் கோயிலாகும்.

*‘‘நமசிவாய’’ எனும் ‘‘பஞ்சாட்சர மந்திரம்’’ உருவான ஸ்தலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில். பெண்ணாடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. தன் சாபம் நீங்க பிரம்மா தன் மகன் வசிஷ்டருடன் சிவபெருமான் காலில் விழுந்து ஆசிபெற்ற தலம். அப்போது பிரம்மா கேட்டுக்கொண்ட படி தன் மகன் வசிஷ்டருக்கு சிவபெருமான் வழங்கியதுதான் ‘‘நமசிவாய என்ற பஞ்சாட்சரம்.’’

*திருமூலர் அரச மரத்தின் கீழ் பல ஆண்டுகளாக யோக நிலையில் இருந்து 3000 பாடல்களை எழுதினார். அதுதான் ‘‘திரு மந்திரம்’’ எனும் நூல். திருமூலர் அப்படி இருந்து பாடல்கள் எழுதிய இடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறையின் ஆதினத்திற்கு சொந்தமான கோமுத்தீஸ்வரர் கோயில். இது மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது.

*திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது கடையம். இங்குள்ள நித்திய கல்யாணி சமேத வில்வவனநாதர் கோயிலின் முன்புள்ள வட்டப் பாதையில் அமர்ந்துதான் மகாகவி பாரதியார் புகழ் பெற்ற ‘‘காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்’’ என்ற பாடலை எழுதினார். காரணம், இவ்வூரின் மாப்பிள்ளை அவர். இவ்வூரைச் சேர்ந்த செல்லம்மாளைத்தான் அவர் மணம் புரிந்தார்.

*ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கும், திருப்பூருக்கும் இடையே சிவன் மலை உள்ளது. இங்கு முருகன் வள்ளி தெய்வானை யுடன் அருள்புரிகிறார். அசுரர்களை கொல்வதற்காக சிவன் இமயமலையை வில்லாக வளைத்த போது, அதிலிருந்து விழுந்த சிறு துண்டே இம்மலை என்று கூறப்படுகிறது. அகத்திய முனிவர் இங்குள்ள முருகனை வழிபட்ட பின்னரே செந்தமிழ் உபதேசம் பெற்றதாக கூறப்படு கிறது. இதனை அகத்தியர் தமிழ் கற்ற கோயில் என்கிறார்கள்.

*ஒரு முறை ‘‘மயூரசர்மன்’’ என்ற கவுட தேச மன்னன் விதிவசத்தால் தன் இரு கண்களையும் இழக்க நேரிட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் படைவீடு ரேணுகாதேவி கோயிலின் மகிமை அறிந்து அங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி அம்பாளை வணங்கி மீண்டும் அவர் பார்வை பெற்றதாக புராணம் கூறுகிறது. வடமொழியில் புலமை பெற்ற அவர் கண்பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் சூரியனை துதித்து இயற்றிய நூல்தான் ‘‘சூரிய சதகம்’’ ஆகும்.

*சண்முக சிகாமணி கவிராயர் சிவகாம சுந்தரி அம்மையாருக்கு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் மகனாக பிறந்தவர் குமரகுருபரர். இவருக்கு ஐந்து வயது வரை பேசும் சக்தி இல்லாமல் இருந்தார். திருச்செந்தூர் செந்திலாண்டவர் சந்நதியில் இவருக்கு திடீரென பேச்சு வந்து ‘‘பூ மேலும் செங் கடல்’’ என்று முருகனின் பெருமையைப் பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், பாடல்கள் முழுவதையும் பாடி முடித்தார். அந்த பாடல்களின் தொகுப்பே ‘‘கந்தர் கலிவெண்பா’’ ஆயிற்று.

தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!