Wednesday, July 3, 2024
Home » அறிவை விரிவு செய், வாழ்வில் வெற்றியை நோக்கிச் செல்

அறிவை விரிவு செய், வாழ்வில் வெற்றியை நோக்கிச் செல்

by Porselvi

ஒரு செயலைச் செய்வதற்கு இதுதான் சரியான வயது என்பதை மற்றவர்களுடைய வாழ்க்கையில் இருந்துதான் நாம் எடுத்துக் கொள்கின்றோம். அந்த வயதுக்கு முன்போ, அந்த வயதை தாண்டியோ அந்த செயலைச் செய்வது நிச்சயம் தோல்வியில்தான் முடியும் என்று நாமே முடிவுக்கு வந்துவிடுகின்றோம். சாதனையார்களுடைய பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அவர்களுடைய சாதனைக்கும் வயதுக்கும் எப்போதுமே சம்பந்தமே இருக்காது. எனும் உண்மை புரியும். எதை அடைய வேண்டும் எனும் தெளிவான லட்சியமும், அதற்குரிய அறிவும்,அதை நோக்கிய பார்வையுமே அவர்களிடம் இருக்கும். அர்ஜுனரின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக்கண்ணை போல நேர்த்தியான,கூர்மையான லட்சிய பார்வை அவசியம்.

ஒருவர்,ஒரு நூலை எழுதிப் புதுப்பிக்க வேண்டும் எனில் எத்தனை வயதாக வேண்டும் என்பதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அடாவ்டோ கோவால்ஸ்கி டா சில்வா எனும் பிரேசில் நாட்டு எழுத்தாளர் ‘அப்ரெண்டேலே’ எனும் நூலை எழுதியபோது அவருடைய வயது என்ன தெரியுமா? ஐந்தரை! பால் குடிக்கும் வயதில் நூல் வடித்திருக்கிறார் அவர். அமெரிக்காவை சேர்ந்த எமிலி ரோஸாவுக்கு மருத்துவம் மற்றும் அறிவியல் மீது அலாதி விருப்பம். சின்ன வயதிலேயே அவை குறித்த நூல்கள், ஆய்வுகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தார்.அவருடைய முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது வெறும் 11.

நியதிகளை மீறிய செயல்களே சாதனைகளாக பதிவாக்குகின்றன. வயதைக் காரணம் காட்டி செயல்களைத் தாமதப்படுத்தும் போது அவை சாதாரண வெற்றியாகக் கூட மாறாமல் போய் விடுகின்றன. அப்படித்தான் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் இந்த பள்ளி மாணவி.பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சிலர் சக மாணவர்களை கிண்டல் செய்வது வழக்கம். ஆங்கிலத்தில் இதை ‘புல்லியிங்’ அல்லது ‘டீஸிங்’ என்று சொல்வதுண்டு. இதுபோன்ற கிண்டல், கேலிக்கு ஆளாகும் மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வை கண்டுபிடித்துள்ளார் ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்.
அனுஷ்கா ஜாலி டெல்லியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றார்.ஒருமுறை ஆறு வயது பெண் குழந்தையை இவரது நெருங்கிய நண்பர்கள் கிண்டல் செய்வதைப் பார்த்துள்ளார். அனுஷ்காவின் நண்பர்கள் அந்தச் சிறுமியின் பெயரைச் சொல்லி கேலி செய்துகொண்டிருந்தனர்.அந்த சிறுமி பயந்துவிட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் அவமானத்தில் குழப்பத்துடன் நின்றுகொண்டிருப்பதை அனுஷ்கா பார்த்து இருக்கின்றார்.இது சார்ந்த பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்று சிந்திக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு அனுஷ்கா இளம் தொழில்முனைவோர் அகாடமி வகுப்பிற்கு சென்றார். அங்கு இந்தப் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அங்குள்ள பயிற்சியாளர்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அனுஷ்காவை ஊக்குவித்துள்ளனர். இப்படித் தொடங்கியதுதான், ‘‘Anti-Bullying Squad” என்ற வலைத்தளம் மூலமாக ஒவ்வொரு பள்ளியிலும் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து. அதன் மூலமாக இளம் மாணவர்கள் கிண்டல்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதே போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தினார்.அது மட்டுமல்ல கேலி,கிண்டலுக்கு எதிராக ஒரு ‘‘கவாச்” என்ற செயலியும் அனுஷ்கா உருவாக்கி இருக்கிறார். இந்த செயலி பற்றி அனுஷ்கா விவரிக்கும்போது, கேலி,கிண்டலுக்கு உட் படுத்தப்பட்டு பாதிக்கபட்டவர்களோ அல்லது அவர்களது அருகிலிருப்பவர்களோ அல்லது மாணவர்களின் பெற்றோர்களோ கிண்டல் குறித்து இந்தச் செயலியில் புகாரளிக்கலாம்.

இவர்கள் பொதுவாக கிண்டல் செய்பவர்களைக் கண்டு பயந்துவிடுகிறார்கள். நாம் புகாரளிப்பது தெரிந்தால் நமக்கு பிரச்சனை வரும் என்கிற பயம்தான் அது. எனவே இதுபோன்றவர்கள் தங்கள் பெயரை வெளியிடாமல் புகாரளிக்கும் வசதியும் இதில் உள்ளது. சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகிகள், இந்தப் புகார்கள் தொடர்பாக தீர்வு காண்பார்கள். பள்ளிகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் கேமராவில் கவர் ஆகாத இடங்களிலேயே நடக்கின்றன என்கிறார் அனுஷ்கா.ஷார்க் டேங்க் இந்தியா என்ற டிவி நிகழ்ச்சியில் இந்தச் செயலி 50 லட்ச ரூபாய் நிதி உதவியும் பெற்று உள்ளது.நிதித் தொகையைக் கொண்டு கூடுதலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் அனுஷ்கா.

செயலியைப் பயன்படுத்தும் ஒரு நபர் மற்றவர்களும் பதிவிறக்கம் செய்ய ஊக்குவிப்பார்கள்.இப்படி ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தனை பேரிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதைக் கண்காணிக்கும் வசதியும் செயலியில் உள்ளது என்கிறார்.மன ஆரோக்கியம் சார்ந்த பிரிவில் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தவும் அனுஷ்கா திட்டமிட்டு வருகிறார். அனுஷ்காவின் தொடர் முயற்சிக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்துள்ளன. தொழில்நுட்பம் சார்ந்து பெண்கள் தலைமையில் நடக்கும் ஸ்டார்ட் அப்கள் பட்டியலில் அனுஷ்காவின் செயலி இடம்பெற்று உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கேலி,கிண்டலுக்கு எதிராக ‘‘கவாச்” என்ற செயலியை கண்டுபிடித்த 13 வயது சிறுமி அனுஷ்கா ஜாலிக்கு, சமீபத்தில் டெல்லியில் இந்திய ஜனாதிபதி அவர்களால் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை பிரிவில் அனுஷ்காவிற்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மனமகிழ்ச்சியுடன் கல்வி பயிலும் ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்கிறார் அனுஷ்கா.இளம்வயதில் தனது அறிவை விரிவடையச் செய்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சகமாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி சாதித்து வரும் இளம் சாதனையாளர் அனுஷ்கா இன்றைய இளம் மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணம் என்றால் அது மிகையாகாது.அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுக்கு சொன்னது என்னவென்றால், மாணவர்கள் தங்கள் கல்வியால் பெற்ற அறிவையும், திறமையும் கொண்டு சமூகத்திற்கு பயன்படும்விதத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் சமூக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான், அதன் படி செயல்பட்டு இளம் வயதில் சாதித்து, தேசிய விருது பெற்று, அனைவராலும் பாராட்டைப் பெற்ற அனுஷ்காவின் சாதனை இன்றைய மாணவர்களுக்கு ஒரு உன்னத பாடமாகும்.

– பேராசிரியர்.
அ. முகமதுஅப்துல்காதர்

 

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi