கத்தியை சுழற்றியபடி இன்ஸ்டாவில் ரீல்ஸ்: வாலிபர் கைது

பெரம்பூர்: கத்தியை சுழற்றியபடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் பாலகிருஷ்ணன் நகர் பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு பகுதியில், கொளத்தூர் உதவி ஆய்வாளர் மதன்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தியை சுழற்றியபடி, தனது நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்டது தெரியவந்தது.

விசாரணையில், அவர் கொளத்தூர் சிட்டிபாபு நகரைச் சேர்ந்த சந்துரு (19) என்பதும், இவர், தனது நண்பர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவருடன் சேர்ந்து, கத்தியுடன் பல்வேறு ரீல்ஸ்களை செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும் தெரிய வந்தது. பின்னர் சந்துரு மீது வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர். இதனையடுத்து அந்த வாலிபரை வைத்து, இதுபோன்ற ரீல்சும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம், நல்லொழுக்கமே நன்மை பயக்கும் என்று வீடியோ எடுத்து, சென்னை காவல்துறை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் படத்துடன் கூடிய விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை