கிச்சன் டிப்ஸ்

* குழம்புக்கு மிளகாய்த்தூள் அரைக்கும்போது ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் பல மாதங்களானாலும் பூச்சி, வண்டு பிடிக்காமல் இருக்கும்.
* எலுமிச்சம் பழச்சாறு கலந்து சர்பத் தயாரிக்கும்போது அதில் ஒரு சிட்டிகை உப்பு கலந்துவிட்டால் துவர்ப்புத் தன்மை நீங்கி சுவையாக இருக்கும்.
* எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்துவிட்டால் புதிது போல் இருக்கும். சாறும் அதிக அளவில் கிடைக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கிவிடும்.
* கேக் சாஃப்ட்டாகவும் அதிக மணமுடனும் இருக்க அரைகப் ஆரஞ்சு பழச்சாறு சேர்க்கவும்.
* பிரெட் சான்ட்விச் செய்ய ஜாம் இல்லாவிட்டால் ஒரு ஸ்லைசில் தேனையும், மற்றொரு ஸ்லைசில் வெண்ணெயையும் தடவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடலாம். ஜாம் இல்லாத குறை தெரியாது.
* நாலைந்து கிராம்புகளை சர்க்கரை டப்பாவில் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை இருக்காது.- எம்.ஏ.நிவேதா.
* தக்காளி சட்னிக்கு சிறிது புளி சேர்த்து சமைத்தால் சுவை கூடுதலாகும்.
* கோகோ பவுடரில் சாக்லெட் கேக் செய்யும்போது சிறிது இன்ஸ்டன்ட் காபி சேர்த்தால் சாக்லெட் கேக்கில் ஒரு வித்தியாசமான சுவை கிடைக்கும்.
* பிரெட் ஸ்லைஸ்களில் சால்ட் பட்டர் அல்லது நெய் தடவி அதன்மேல் இட்லிப் பொடி தூவி, துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
* பீட்ரூட்டை கழுவிவிட்டு அடி, நுனி சீவி எடுத்துவிட்டு அப்படியே முழுசாக குக்கரில் வேகவைத்து எடுத்து தோலுரித்து சமைத்தால் நிறமும் மாறாது. சத்தும் வீணாகாது.
* எலுமிச்சம் பழ ஜூஸில் சிறிது சோம்புத்தூள் கலந்து பருகினால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
* பஜ்ஜி மிளகாயை இரண்டாக பிளந்து, எண்ணெய்யில் லேசாக வதக்கி எடுத்து பின்னர் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் காரமே இருக்காது. விதைகளை நீக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
* தோசைமாவு சரியாக புளிக்காவிட்டால் தோசை சரியாக வார்க்க முடியாது. அதனால் மாவில் சிறிது சர்க்கரை போட்டு கலந்து வார்த்தால் நன்றாக தோசை வரும்.– அ.யாழினி பர்வதம்.
* முட்டையை வேகவைக்கும்போது வேக வைக்கும் தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேகவிட்டால் முட்டையில் விரிசல் விடாது. திரவமும் வெளிவராது.
* பச்சைப்பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை லேசாக வாசனை வரும்படி வறுத்துவிட்டு செய்தால் சுண்டல் உதிரியாக வரும்.
* கலந்த சாதம், வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சைச் சாறைவிட்டு கிளறினால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.
* பக்கோடா செய்யும்போது சிறிதளவு வேர்க்கடலையை பொடிசெய்து கடலைமாவில் கலந்து செய்தால் பக்கோடா மொறு மொறுவென ருசியாக இருக்கும்.
* வெங்காயப் பக்கோடா செய்யும்போது, சிறிது இஞ்சியையும் அரைத்து சேர்த்து பக்கோடா மாவில் கலந்து செய்தால் வாசனையாக இருப்பதோடு வாயுத் தொல்லை நீங்கும். – எம்.வசந்தா.
* மிளகாய், தனியா, சீரகம் போன்ற மசாலா சாமான்களை கடையில் இருந்து வாங்கி வந்ததும் ஒருமுறை வாணலியில் லேசாக வறுத்துவிட்டு, பிறகு பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்டநாட்கள் கெடாமல் இருக்கும்.
* மிளகாய் வற்றலை வறுக்கும் முன்பு அதனுடன் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி கமறல் இருக்காது.
* கண்ணாடி பாட்டிலில் மிளகாயைப் போட்டு, இறுக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.- அமுதா அசோக்ராஜா.
* கைகளில் டெட்டால் வாசனை, பினாயில் வாசனையைப் போக்க, கடுகு கலந்த நீரால் கழுவ, வாசனை போய்விடும்.
* அடிபிடித்த பாத்திரத்திற்குள் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு நீரை ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு எடுத்து சுரண்டி தேய்க்கப் பாத்திரம் பளிச்சென ஆகும்.
* செம்புப் பாத்திரங்களை புளி அல்லது எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து தேய்க்க பளிச்சிடும்.- பிரியா மது.
* தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை சீவி எடுத்து அரிசியுடன் சேர்த்து அரைத்து தோசை வார்க்கலாம். உளுந்து தேவை இல்லை. சுவை நன்றாக இருக்கும்.
* வாழைப்பழங்களை சீப்பாக வாங்கி வந்தால், அதை அப்படியே டேபிள் மீது வைக்காமல் ஒரு கயிறுகட்டி அதில் தொங்கவிட்டால் விரைவில் பழுத்துவிடாமல் இருக்கும்.
* பாயசத்தில் திராட்சைக்குப் பதில் பேரீச்சம்பழத்தை நறுக்கிச் சேர்த்தால் அருமையாக இருக்கும்.
* தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் விரைவில் புளிக்காது.
* ரவையை உப்புப் போட்டுப் பிசறி வைத்து அத்துடன் உளுந்தை அரைத்துச் சேர்த்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
* அதிரசம் செய்யும்போது சிறிது பேரீச்சம்பழம் கலந்து செய்தால் சுவையாகவும், மெத்தென்றும் இருக்கும்.
* இரண்டு வாழைப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு ஏலக்காய்ப் பொடியுடன் ஏதாவது ஒரு எசன்ஸ் சேரத்துவிட்டால் சத்தான பாயசம் தயார்.
* நறுக்கிய ஆப்பிள் மீதமாகிவிட்டால் சிறிது உப்புக் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாமலும், கெடாமலும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தில் 4 கிராம்புகளை குத்தி, அதை கிச்சனில் வைத்துவிட்டால் கிச்சன் மணமுடன் இருக்கும். பூச்சிகளும் வராது.- மல்லிகா சங்கரபாண்டியன்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது