கிச்சன் டிப்ஸ்

*கேரட், முள்ளங்கி, பீட்ரூட் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின் இரு பக்க முனைகளையும் வெட்டிவிட்டு வைத்தால் விரைவில் அழுகாது.
*பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ஃப்ரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்த பின் நறுக்கினால், பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.
*கொத்துமல்லி, கறிவேப்பிலை தழையை வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் நீண்ட நாள் வாடாமல் இருக்கும்.
*சப்பாத்தி, பூரி இவற்றைச் செய்ய மாவை தேய்த்து வைத்துக்கொண்டு, பிறகு அடுப்பைப் பற்ற வைத்தால் செய்வதும் சுலபம். கேஸூம் வீணாகாது.- டி.லதா.
*முருங்கைப் பூவை சிறிது தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மோர்க்குழம்பு சுவையாக இருக்கும்.
*ஃப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, அதனுடன் வேகவைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக்கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் சுவையும் நன்றாக இருக்கும். – ர.ரேவதி.
*உளுந்துவடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று இருக்கும்.
*கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகளை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாகக் கிளறலாம்.
*தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
*ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன்பு கொதிக்கும் எண்ணெயில் நனைத்த துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்து எடுத்து பின்பு ஊறுகாய் போட்டு மூடினால் பூசணம் பிடிக்காமல் இருக்கும்.
*அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் தாது உப்புகளும், வைட்டமின்களும் நிறைந்து இருக்கிறது.
*வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் ஜுரம் வரவே வராது.
*பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காயைப் பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும். இவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
*குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் அதில், மைதாமாவைப் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, பின்னர் சப்பாத்தி போல திரட்டி, சதுரத் துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து பாகில் சேர்த்தால் சுவையான மைதா பிஸ்கட் தயார். – கவிதா சரவணன்.

 

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு