கிச்சன் டிப்ஸ்

*சேமியா பாயசம் வைக்கும்போது கடைசியில் 1 தேக்கரண்டி அரிசி மாவு கரைத்து ஊற்றி இறக்கினால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.
*பருப்பு சாம்பார் வைக்கும்போது கடைசியில் வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 1 தேக்கரண்டி சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.
*கார வடைக்கு அரைக்கும்போது நீர் அதிகமாகிவிட்டால் 1 தேக்கரண்டி கடலைமாவு சேர்த்தால் வடை மாவு பதமாகிவிடும். அதன்பிறகு வடை போட்டால் மொறுமொறு வடை ரெடி.
*வெயில் இல்லாத காலங்களில் மளிகைப் பொருட்களை காய வைக்க, சமைத்து முடித்தபின் அடுப்பின் மீது ஒரு தட்டு வைத்து அதில் மளிகை பொருட்களை பரப்பி வைத்தால் அந்த சூட்டில் பொருட்கள் வெயிலில் வைத்தது போல் காய்ந்து விடும்.- மரகதம் ரவி.
*உருளைக்கிழங்கு, வாழைக்காய் என்று எந்த வறுவலாக இருந்தாலும் அவற்றுடன் வெறும் மிளகாய்ப்பொடி, உப்பு கலந்த பின்பு சிறிது இஞ்சி, பூண்டு, சோம்பு மூன்றையும் அரைத்துக்கலந்தால் நல்ல மணத்துடன் இருக்கும்.
*தேங்காய்த் துவையல் செய்யும்போது சிறிதளவு தனியாவையும் வறுத்து அரைத்தால் துவையல் மணமாகஇருக்கும்.
*பீட்ரூட்டை தேவையான அளவு துண்டுகளாக்கி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை நன்றாக வடிகட்டி, ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு வழக்கமாக ஊறுகாய் செய்வதைப் போலசெய்யவும். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.
*கோஸ் பொரியலுக்கு துவரம்பருப்பு, கடலைப் பருப்பிற்கு பதில் வேர்க் கடலை கலந்து செய்யலாம்.
*பூரிக்கு கிழங்கு குருமா செய்யும்போது பாதி வெங்காயம், மீதி கோஸ் சேர்த்து வதக்கினால் ருசிக்கும்.
*கொண்டைக்கடலையை ஊறவைத்த பிறகு ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து, பிறகு வேக வைத்தால் பெரிதாகி இருக்கும்.
*கருணைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக்கி அதனுடன் வெண்ணெய், கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, காரம் சேர்த்து வறுத்தெடுத்தால் ருசியோ ருசி. காரல் இருக்காது.– இந்திராணி தங்கவேல்.
*தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மோர்மிளகாய் செய்யும்பொழுது கொஞ்சம் பாகற்காய்களையும் வில்லை போட்டு வத்தல் செய்து விடுங்கள். காரமும், கசப்பும் சேர்த்து ரொம்பவே சுவையாக இருக்கும்.
*அரிசி குருணை உப்புமா செய்பவர்கள் சம அளவிற்கு சேமியாவை வறுத்து குருணை பாதி வெந்ததும், சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, அரை மூடி எலுமிச்சை பிழிந்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் கூடிய உப்புமா தயார்.
*கிரேவி வகைகளில் கொஞ்சம் வேர்க்கடலையை தோல் உரித்து 20 நிமிடம் ஊற வைத்து நைசாக அரைத்து சேர்த்துப் பாருங்கள். ரிச்சான, செம டேஸ்ட்டியான கிரேவி தயார்.
*பெருங்காயத்தை உடைப்பதற்கு கஷ்டமாக இருந்தால் இரும்பு வாணலியில் கொஞ்சநேரம் வைத்தால் இளக ஆரம்பிக்கும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தனித்தனியாக பிரித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளலாம். சமைக்கும்பொழுது பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.
*ஜவ்வரிசி வத்தல் அல்லது அரிசி கூழ் வத்தல் செய்யும்போது பொதுவாக சீரகம் போடுவார்கள். அதற்கு பதிலாக கொஞ்சம் கசகசாவை பொடித்து சேர்த்து வடாம் தயாரித்தால் மணமும், ருசியும் அபாரமாக இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய் காறல் இல்லாமல் இருக்க கொதிக்கும் எண்ணெயில் கொஞ்சம் புளியை சேர்த்து கரியவிட்டு பின் எடுத்துத் தூக்கிப் போட்டுவிடுங்கள். அதன்பின்பு உணவுப் பண்டங்களை பொரித்து எடுத்தால் காறல் இருக்காது.
*முறுக்குப்பிழிய மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசையாமல், நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் நெய் கூடுதலாக கலந்து பிசைந்து முறுக்கு பிழிந்து பாருங்கள். கரகரப்பாக, டேஸ்ட்டியாக இருக்கும்.
*முற்றிய பாகற்காயாக இல்லாமல் பார்த்து எடுத்து சிறுசிறு வில்லைகளாக நறுக்கி அதனை எலுமிச்சை சாறில் 2 நாள் ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்துப் பாருங்கள். கொஞ்சம் கூட கசப்பு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
*இட்லிக்கு தொட்டுக் கொள்ள சட்னி அரைக்கும்போது, கடைசியாக தாளிக்க கொஞ்சம் நல்லெண்ணெயும், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் ரெண்டு இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள்.
*பூரி சுடுவதற்கு கோதுமை மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து எடுத்தால் நீண்ட நேரம் பூரி நமத்துப் போகாமல் அப்படியே புசுபுசுவென இருக்கும்.
*தர்பூசணி, வெள்ளரிப்பழத் துண்டுகள் அல்லது முலாம்பழத் துண்டுகளோடு சிறிது மோர், சர்க்கரை, பனீர் சேர்த்து ஜூஸ் தயாரித்துப் பருக புதுவிதசுவையில் இருக்கும்.
*பாகற்காய் காரக்கறி செய்யும்போது அத்துடன் சிறிது கடலைப்பருப்பை வேகவைத்து லேசாக மசித்துப் போட்டு கிளறி இறக்கினால் காரக்கறி மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
*உளுந்துவடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவைத் தூள் செய்து போட்டுக் கலந்து வடை செய்தால் மொறுமொறுவென சுவையாக இருக்கும்.
*காபி ஃபில்டரின் அடியில் சிறிதளவு உப்பைப் போட்டு அதன்மீது காபிப் பொடியைக் கொட்டி வெந்நீரை ஊற்றினால் டிகாஷன் கெட்டியாக இருக்கும்.
*ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, அதனுடன் வேக வைத்த சோளத்தை சிறிதளவு சேர்த்து சமைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.- பொ. பாலாஜிகணேஷ்.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!