கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* எலுமிச்சை சாதம் செய்யும் போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறிட, சுவையாய் இருக்கும்.

* தோசை வார்க்கும்போது கடினமாக வந்தால் சாதம் வடித்த கஞ்சியை மாவில் சேர்த்து ஊற்ற தோசை சாஃப்டாக வரும்.

* இட்லியை உப்புமாவாக தாளிக்கும்போது, காய்கறிகளை பொடியாக நறுக்கி, வதக்கி சேர்த்துக்கொள்ள சுவையாக இருக்கும்.

* ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு 1 சேர்த்து பொடித்து பாயசம், இனிப்பு வகைகள் செய்யும்போது சேர்க்க சுவை அதிகரிக்கும்.

– மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

* தோசை மாவு, பொங்கலில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

* பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து, அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

* இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

* தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து சேர்த்தால் வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

– கவிதா சரவணன், திருச்சி.

* பீட்ரூட்டை பாலில் வேகவைத்து அல்வா செய்தால் ருசியாக இருக்கும்.

* மைசூர் பாகுக்கு மாவு தயார் செய்யும் போது சிறிது முந்திரிப் பருப்பைப் பொடியாக்கிச் சேர்த்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* உப்பு ஜாடியில் எலுமிச்சை பழத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

– சௌமியா சுப்ரமணியன், சென்னை.

* பிரட்டிற்கு தடவும் ஜாம் இருந்தால் சிறிதளவு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் ‘மிக்ஸட் ஃப்ரூட்’ டிரிங்க் ரெடி.
இதில் ஐஸ் துண்டுகளைச் சேர்த்து பரிமாறலாம்.

* ஒரு பங்கு புழுங்கலரிசி, கால் பங்கு பச்சரிசி, கால் பங்கு ஜவ்வரிசி ஊறவைத்து ஒரு பிடி பழைய சாதம், தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து ஆப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.

* சுண்டக் காய்ச்சிய 1/2 லிட்டர் பாலில் பத்து அல்லது பதினைந்து முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, இரண்டு வெள்ளரி வில்லைகள், திராட்சை 10 மிக்ஸியில் அடித்து ஒரு துளி ரோஸ் எஸென்ஸ் விட்டு பிரீஸரில் ஐஸ்கிரீம் கட்டிகள் வைக்கும் தட்டில் ஊற்றி ஒவ்வொரு ஐஸ்கிரீம் ஸ்பூனை செருகி வையுங்கள். கெட்டியான முந்திரி, பாதாம் கலந்த சுவையான மில்க்
ஐஸ்கிரீம் தயார்.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* முதல் நாள் சாதம் மீதி இருந்தால் அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* இறைச்சி வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

* இட்லிக்கு அரிசி ஊற வைக்கும் போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி சாஃப்டாக இருக்கும்.

– எல். உமா மகேஸ்வரி, வாணியம்பாடி.

* பாயசம் நீர்க்க இருந்தால், அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு, கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.

* உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

– எம். நிர்மலா, புதுச்சேரி.

* கருணைக்கிழங்கை வெட்டுவதற்கு முன் கையில் கொஞ்சம் புளித்தண்ணீர் தடவிக்கொண்டு பிறகு கிழங்கை வெட்டினால், கையில் நமைச்சல் ஏற்படாது.

* அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற மாவு டப்பாக்களில் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய்களை போட்டு வைத்தால் மாவில் பூச்சி வராது. நீண்ட நாட்களும் வரும்.

* பச்சை மிளகாயை காம்பை நீக்கிவிட்டு நிழலான இடத்தில் வைத்தால், சீக்கிரம் காயாமல், நீண்ட நாட்கள் வரும்.

* பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை கலந்து பிசைந்தால், பொரித்த பூரி நீண்டநேரம் நமுத்துப் போகாமல் இருக்கும்.

– ஆர். கீதா, சென்னை.

அவல் பணியாரம்

தேவையானவை:
அவல் – 1 கப்,
ரவை – ½ கப்,
வெங்காயம் – 1,
இஞ்சி – சிறிது,
பச்சைமிளகாய் – 1,
அரிந்த கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: அவலில் தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் ஊறவைத்து பின் கரண்டியில் நன்கு மசித்துக் கொள்ளவும். ரவை, உப்பு போட்டு நீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். அறிந்த வெங்காயம், இஞ்சி துருவியது, பச்சைமிளகாய் துண்டுகள், மல்லி, கறிவேப்பிலை கலந்து, பணியார சட்டியில் எண்ணெய் தடவி சூடானதும் பணியாரக் குழியில் மாவை ஊற்றி சுற்றிலும் 1 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் வெந்ததும் பணியாரத்தை எடுக்கவும். அவல் பணியாரம் தயார். எந்த சட்னியுடனும் சாப்பிட ஏற்றது.

– எம்.வசந்தா, சென்னை.

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!