கிச்சன் டிப்ஸ்

 

* சமோசாக்களில் வைக்கும் உருளைக்கிழங்கை வேக வைக்காமல், அல்லது அரை வேக்காட்டில் வைத்து பொரித்துச் சாப்பிட்டால் கொழுப்புச்சத்து ஏற்படாது.
* சமோசாவை ஃபிரீஸரில் வைத்துவிட்டால், அதைச் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எடுத்து, லேசாக சூடுபடுத்தி சாப்பிடலாம்.
* அரிசியை வேக வைக்கும்போது சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறு விட்டால் சோறு வெள்ளையாக இருக்கும். சுவையும் கூடும். உதிர் உதிராக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* கைகளில் மீன் கழுவிய நாற்றம் அடித்தால் சிறிது உப்பைக் கைகளில் தடவிக் கொண்டு பிறகு கையைக் கழுவினால் வாடை இருக்காது.
* சர்க்கரை டப்பாவில் நான்கைந்து கிராம்புகளைப் போட்டுவிட்டால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பிஸ்கட் வைக்கும் முன்பு அடியில் பிளாஸ்டிக் பேப்பரைப் போட்டு, அதில் அடுக்கி வைத்தால் நமுத்துப் போகாமல் நீண்ட நாட்களுக்கு மொறு மொறுப்புடன் இருக்கும்.
* உடைக்காத தேங்காயை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துவிட்டால் அதன்மேல் உள்ள நாரை எளிதில் அகற்றிவிடலாம்.
* சமைக்காத மீன்களை ஒரு நாளைக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுவிடும். ஃப்ரிட்ஜிலும் வாடை வீச ஆரம்பித்துவிடும்.
* கற்பூரம் உள்ள டப்பாவில் சில மிளகுகளைப் போட்டு வைத்தால் கற்பூரம் காற்றில் கரைந்து போகாமல் இருக்கும்.
* ஆம்லெட் அதிக ருசியுடன் இருக்க சிறிதளவு தேங்காய் சேருங்கள்.
* நேந்திரங்காய் சிப்ஸ் வறுக்கும்போது, சிறிது மஞ்சளையும் இடித்துச் சேருங்கள். சிப்ஸ்க்கு நல்ல நிறம் கிடைக்கும்.
* பூண்டுடன் கேழ்வரகைக் கலந்து வைத்தால் புழு பிடிக்காமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
* தலா ஒரு துண்டு வசம்பு, மஞ்சள், கைப்பிடி வேப்பங்கொழுந்து சேர்த்து மைய அரைத்து மைதா மாவில் கலந்து தண்ணீர்விட்டு பசைபோல குழைத்து புதுமுறம், கூடைகளில் மெழுகி காய வைத்தால் அழகாக இருக்கும். பூச்சி, எலிகள் அண்டாது. பருப்பு இரண்டு கொதி வந்ததும், நெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில் அரை தேக்கரண்டி, மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி போட்டால் பருப்பு தண்ணீர் பொங்காது. பருப்பும் சீக்கிரமாக வேகும்.
* நெய் உருக்கி வைத்ததும் கெட்டியாகி விடுகிறதா? நெய்க் கிண்ணத்தை ஃபிரிட்ஜ் ஸ்டெபிலைசர் மேல் வைத்திருந்தால் எப்போதும் உருகிய நிலையில் இருக்கும்.
* கேரட்டை வேக வைக்கும் தண்ணீரில் ஓரிரு சிட்டிகை சர்க்கரை போட்டால், கேரட்டிற்கு தனிமணம் கொடுக்கும்.- அண்ணா அன்பழகன்.
* பட்சணங்கள் செய்யும்போது எண்ணெய் பொங்காமலிருக்க, எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு துண்டு வாழைப்பழத்தோலை போட்டு கருகும்வரை பொரித்துவிட்டால் போதும்.
* துவரம்பருப்பை வேக வைக்கும்போது தேங்காய்த் துண்டு ஒன்றை போட்டால், பருப்பு சீக்கிரம் வெந்து வெண்ணெய் போல குழைவாகும்.
* ஓர் அச்சு வெல்லத்துண்டை நெய் பாத்திரத்தில் போட்டு வைத்தால் வெகு நாட்கள் வரை நெய்யின் ருசியும், மணமும் மாறாமலிருக்கும்.
* கிச்சனில் எண்ணெய் அல்லது நெய் சிந்தி கறையானால், சிறிது மண்ணெண்ணெய் தெளித்து பூசி ஊற வைத்து, ஈரத்துணியால் அழுத்தி துடைத்தால் போதும், கறை காணாமல் போகும்.
* ரசம் அல்லது குழம்புக்கு அவசரமாக புளி கரைக்க வேண்டுமென்றால் சூடான வெந்நீரில் புளியை ஊற வைத்தால் போதும். நொடியில் புளிக்கரைசல் தயார்.
* குளிர்காலத்தில் சப்பாத்தி மாவு பிசைய வெந்நீரை உபயோகித்தால், சுலபமாக பிசைய வரும்.- அ.யாழினி பர்வதம்.
* சப்பாத்தி சுட்ட தோசைக்கல்லில் உடனே தோசை ஊற்றினால் எடுக்க வராது. அதற்கு, வாழை இலையை சிறிது எடுத்து எண்ணெய்விட்டு தேய்த்தபின் தோசை சுட்டால் மிக எளிதாக எடுக்கவரும்.
* தோசைக்கல்லில் சிறிது பெருங்காயப் பொடியைத் தூவி எண்ணெய்விட்டு கல் முழுவதும் தேய்த்தபின் தோசை சுட தோசை நல்ல மணமாக இருக்கும். கல்லில் இருந்து எடுப்பதற்கும் நைசாக வரும்.
* பூசணிக்காய், பரங்கிக்காய் விதைகளை நீக்கி தோல் சீவி சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் கெடாது.
* சேனைக்கிழங்கை நறுக்கியவுடன் கரைத்த புளித்தண்ணீரை அதில் விட்டால் அதன் காரல், அரிப்பு குறையும்.
* காலையில் சமைத்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொடிமாஸ் போன்றவை மீந்துவிட்டால், கடலைமாவில் தோய்த்து போண்டாவாக போடலாம். ருசியாக இருக்கும்.
* தக்காளி சூப் செய்யும்போது பாலில் சிறிது மைதாவைக் கலந்து கொதிக்கும் சூப்பில் கலந்தால் சூப் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
* கடலைமாவுடன் சிறிது சோளமாவு கெட்டித்தயிர் சேர்த்துப் பிசைந்து பக்கோடா செய்தால் கரகரப்பாக இருக்கும்.– எம்.வசந்தா.
* சப்பாத்தியின் மேல் சூடான பால்விட்டு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்துக் கொடுத்தால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் வெண்டைக்காயையும் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.
* தக்காளிச் சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டு, அதில் சிறிது எலுமிச்சம்பழச் சாறு கலந்தால் ருசி அதிகமாக இருக்கும்.- இரா. அமிர்தவர்ஷினி.
* வெங்காயம் சாப்பிடாதவர்கள் பக்கோடா செய்யும்போது கோவைக்காய், வெண்டைக்காய்களை நீளமாக வெட்டி அத்துடன் பக்கோடா மாவைக் கலந்து செய்தால், வித்தியாசமான ருசியில் சத்தான பக்கோடா ரெடி.
* காய்கறி துருவியை கழுவ, பல் தேய்க்க உதவும் புது பிரஷினால் தேய்த்தால் அதிலுள்ள துகள்கள் எளிதில் நீங்கிவிடும்.
* மீன் துண்டுகளோடு கால் தேக்கரண்டி கடுகை அரைத்து கலந்தால் மீன் குழம்பில் போடும்போது உடைந்து போகாது.– இந்திராணி தங்கவேல்.

 

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு