கிச்சன் டிப்ஸ்

*மீந்த மோரில் ஒரு தேக்கரண்டி துவரம்பருப்பு போட்டு வைத்தால் வாடை வீசாது.

*டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.

*எள்ளு அடைமாவில் பூண்டு உரித்து நசுக்கிப் போட்டு கலந்து செய்தால், எள்ளடை மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.– இந்திராணி தங்கவேல்.

*உருளைக்கிழங்கை மசித்துச் செய்யும் உணவுகளில் சிறிதளவு ஓமம் கலந்து செய்ய எளிதில் செரிமானமாவதுடன் நல்ல மணத்துடனும் இருக்கும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

*முட்டைவறுவல் செய்யும்போது, அசைவ வாசம் வராமல் இருக்க கொத்துமல்லியைக் கசக்கி, கிளறும்போது சேர்த்தால் வாசம் நீங்கிவிடும்.

*உருளைக்கிழங்கை அரைமணி நேரம் உப்புத்தண்ணீரில் ஊறவைத்துவிட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் சிறிதளவு கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டுகள்,பூச்சிகள் வராது. – இரா. அமிர்தவர்ஷினி.

*பச்சைமிளகாய் மலிவாக கிடைக்கும்போது வாங்கி, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து, காற்றுப் புகாமல் இறுக மூடி வைத்தால் நீண்டநாள் கெடாமலிருக்கும்.

*சூடாக்கிய வாணலியை இறக்கி வைத்து அதில் கடுகைப் போட்டுக் கிளறி, ஆறிய பிறகு பத்திரப்படுத்தி, தேவைப்படும்போது எடுத்து தாளித்தால் கடுகு வெடித்துச் சிதறாது.

*முட்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டிருந்தால் வேக வைக்கும்போது நீரில் சில துளி வினிகரை விட்டால் முட்டை வெளியே வராது.

*கிழங்குகளை உப்புப் போட்டு வேகவிடக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.

*அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் கலந்து பிசறி, உப்புமா செய்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
– அ.யாழினிபர்வதம்.

*சாம்பாருக்குத் தேவையான துவரம்பருப்பு இல்லையென்றால், ஒரு கரண்டி கடலைமாவைக் கரைத்துவிட்டு, அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டால், சாம்பார் தனி
ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

*சட்னி, துவையலுக்கு தேங்காய் இல்லையென்றால் சேனைக்கிழங்கை துண்டு போட்டு அரைத்துச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

*குழம்பு லேசாக கொதி வந்த பிறகுதான் காய்கறிகளைப் போட வேண்டும். காய்கள் நன்றாக வெந்து இறக்கிய பிறகுதான் தாளிதம் செய்து கொட்ட வேண்டும். அப்போதுதான் குழம்பு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*சப்பாத்தி, பூரி மிச்சப்பட்டால் ஒரு பாத்திரத்தில் தோல் சீவிய உருளைக்கிழங்கு ஒன்றுடன் சேர்த்து போட்டு, காற்றுப் புகாமல் மூடி வைத்தால் மறுநாள் சுட வைத்துப் பயன்படுத்தலாம். கெட்டுப் போகாமல் புதுசாக தயார் செய்தது போலவே இருக்கும்.

*மாவுகளில் பூச்சி வண்டுகள் வராமலிருக்க, ஒரு ஸ்பூன் உப்பை துணியில் முடிந்து மாவில் போட்டு வைய்யுங்கள். – அண்ணா அன்பழகன்.

*கொத்துமல்லி, கீரை வகைகளை வாங்கும்போது பூ இல்லாமலும், பழுப்பு நிறம் இல்லாமலும் பார்த்து வாங்க வேண்டும். வாங்கிய உடனே ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்து வேர்கள் மட்டும் நனையும்படி நீர் ஊற்றி வைக்க வேண்டும். வாடாமலும், அழுகாமலும் இருக்கும்.

*சமைக்க வாங்கிய காய்கறிகளை ஒன்றிரண்டு நாளில் பயன்படுத்தி விடுவதே நல்லது. இல்லாவிட்டால் சத்துகளும் சுவையும் குறைந்துவிடும்.

*கத்தரிக்காய் வாங்கும்போது அடர்த்தியான பச்சை அல்லது நீலநிறம் உள்ளவையாகப் பார்த்து வாங்கவும். அவற்றில்தான் ருசி அதிகம்.– எம்.ஏ.நிவேதா

*50 கிராம் புதினாவை காயவைத்து இடித்துத் தூளாக்கி 10 கிலோ அரிசியில் தூவிவிட்டால் வண்டு வராது. சாதமும் மணமுடன் இருக்கும்.

*கோதுமைக்குள் மாங்காயை வைத்து மூடிவைத்தால் விரைவில் பழுத்துவிடும்.

*தேவைக்கு அதிகமாக உருளைக்கிழங்கை நறுக்கிவிட்டால், அவற்றை வினிகர் கலந்த நீரில் முக்கி, ப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கறுக்காது. நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

*பாலை ஃப்ரிட்ஜில் வைக்க மறந்துவிட்டால் அதில் சிறிது பேக்கிங் பவுடர் கலந்து, கலக்கி கொதிக்க வைத்தால் பால் நன்றாகிவிடும்.

*கண்ணாடிப்பாத்திரங்களில் பெயின்ட் கறை இருந்தால், வினிகரை சிறிது சூடாக்கி, அதில் துணியை முக்கி துடைத்தெடுத்தால் கறை அகன்றுவிடும்.

*உடைத்த தேங்காய் காய்ந்து போனால் அதில் பாலை ஊற்றி 10 நிமிடம் கழித்து பயன்படுத்தினால் புதியது போல் இருக்கும்.- அமுதா அசோக்ராஜா.

*தேங்காய் மூடியை துருவும்போது, கொட்டாங்குச்சியின் நார், தூசு உதிர்கிறதா? மூடியை தண்ணீரில் நனைத்து, பிறகு துருவினால் எதுவும் கொட்டாது.

*பாகற்காய் பொரியல் செய்யும்போது, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கலந்தால் கசப்பு தெரியாது.

*வெறுமனே வெந்நீர் காய்ச்சி குடிக்காமல், அதில் சிறிதளவு ஓமம் போட்டுக் காய்ச்சி குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகம் போட்டு காய்ச்சினால் நல்ல செரிமானமாகும்.

*பால் பாத்திரம் தீய்ந்து அடிபிடித்துவிட்டால், வெங்காயத்தை சிறிது நீருடன் பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துவிட்டு தேய்த்தால் அடிபிடித்ததை சுலபமாக நீக்கி விடலாம்.

*வெல்லப்பாகு காய்ச்சும்போது, கொதித்ததும் சிறிது பாலைவிட்டால், அழுக்கு மேலே மிதந்துவரும். அதை கரண்டியால் சுலபமாக எடுத்து விடலாம்.

*சமையலயறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப்போட்டு வைத்தால் எறும்பு வராது. அடுப்பு சாம்பலையும், மஞ்சள் தூளையும் கலந்து தூவினாலும் எறும்பு அண்டாது.

*சமையல் வேலைகள் முடிந்ததும் சிலதுளி எலுமிச்சம்பழச்சாற்றை வெந்நீரில் விட்டு கைகழுவினால் கைவிரல்கள் சுத்தமாகும். கையும் மென்மையாகும்.

*வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.- மல்லிகா அன்பழகன்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்