கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* வடை, பக்கோடா போன்றவை மொறுமொறுப்பாக இருக்க, மாவில் ஒரு மேசைக்கரண்டி ரவையைச் சேர்த்து செய்யுங்கள்.
* குக்கரில் பருப்பு வைக்கும் போது இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால், மணம் நன்றாக இருக்கும்.
* கேக் கலவையில் கொஞ்சம் தேன் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.
* கீரை மசியல் செய்யும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கடைந்தால் ருசியாக இருக்கும்.

விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

* பொடியாக நறுக்கிய தக்காளி, தர்பூசணி துண்டுகள், வெள்ளரிக்காய் நறுக்கியது அனைத்தும் ஒரு கப்புடன், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை, மிளகு பொடி ½ டீஸ்பூன், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி நறுக்கிய புதினா சேர்க்க ஆரோக்கியமான காலை சிற்றுண்டி ரெடி.

* நவதானியங்களை ஊறவைத்து, முளை கட்டிய பின்னர் ஊறிய உளுந்து கலந்து அரைத்து, உப்பு, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்து வைத்து கொள்ள, குழம்புக்கு தாளிக்க நவதானிய வடகம், சுவையாக இருக்கும்.

* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்கள் தயாரிக்கும் போது ஊறிய சோயா உருண்டைகளை தண்ணீரை பிழிந்து விட்டு மிக்ஸியால் ஒரு சுற்று சுற்றி விட்டு, அந்த துருவலை தாளிப்பின் போது சேர்த்து பின் சாதத்தில் கலக்க, சுவையோடு சத்து சேரும்.
மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

* தயிர் வடையின் மேல் வறுத்து அரைத்த சீரகப் பொடியைத் தூவினால் அருமையான மணத்துடன் இருக்கும்.

* காய்ந்த பிரட் துண்டுகளை இட்லித் தட்டில் வேகவைத்து எடுத்தால் புதிது போல் இருக்கும்.

* வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது பொரித்த அப்பளங்களைப் பொடித்து சேர்த்தால் குழம்பு கூடுதல் சுவையுடன் இருக்கும்.

* இடியாப்ப மாவில் சிறிதளவு நெய் சேர்த்துப் பிசைந்தால் இடியாப்பம் மென்மையாக இருக்கும்.

எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

* ஆமவடை செய்யும்போது, உளுத்தம் பருப்பு போடாமல் துவரம் பருப்பு, கடலைப்பருப்புடன் பாசிப்பருப்பு கலந்து வடை தட்ட, ஆறிய பின்னும் சூப்பராக இருக்கும்.

* உளுந்து வடையை தவிர மற்ற வடைகளில் புதினா வதக்கிப் போட்டு சேர்த்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.

* பச்சைப் பட்டாணி 2 டீஸ்பூன், காராமணி 4 டீஸ்பூன், கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு சேர்த்து ஊறவைத்து, காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்தரைத்து வடை தட்டினால் ஹெல்த்தியான வடை தயார்.

அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

* தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

* பூரி மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்து, பூரி செய்தால் மொறுமொறுப்புடன் இருக்கும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்தாலும் புதுச் சுவையுடன் இருக்கும்.

* கீரையை பருப்புடன் ேசர்த்துச் செய்யும் போது தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* கறிவேப்பிலைத் துவையலுக்கு உளுத்தம் பருப்பு தாளிப்பதற்கு பதில் வேர்க் கடலையை வறுத்துப் போட்டால் மணமாக இருக்கும்.

அமுதா அசோக்ராஜா, திருச்சி.

கொங்கு வெந்தயக் குழம்பு

தேவையானவை:
நல்லெண்ணெய் எண்ணெய் தேவையான அளவு,
மிளகாய் வற்றல் 2,
கடலை பருப்பு 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி விதை 1 டீஸ்பூன்,
சீரகம் 1 டீஸ்பூன்,
வெந்தயம் 1 டீஸ்பூன்,
மிளகு 1/4 டீஸ்பூன்,
கசகசா 1/2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் 2 கைப்பிடி அளவு,
பூண்டு 6 பல்,
கறிவேப்பிலை இரண்டு கொத்து,
பெருங்காயம் 1 சிட்டிகை,
துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்,
வெந்தயப்பொடி 1/4 டீஸ்பூன்,
வெல்லம் 1 சிட்டிகை,
புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, சீரகம், வெந்தயம், மிளகு, கசகசா, சிறிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியவுடன் மிக்சியில் நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், சிறிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து எண்ணெயில் நன்றாக வெந்ததும் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், குழம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து குறைவான தணலில் ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்.

இறுதியாக, அரைத்த மசாலா கலவையை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் புளிக்கரைசலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். 10 நிமிடங்களில் குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரியத் துவங்கும். அப்போது வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்து கிளறி விடவும். மணக்க மணக்க சுவையான வெந்தயக்குழம்பு ரெடி.

சௌமியா சுப்ரமணியன், சென்னை.

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்