கிச்சன் டிப்ஸ்

தயிர் அதிகம் புளித்தால் அதில் இரண்டு கப் தண்ணீரைச் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள நீரை அகற்றிவிட்டால் தயிர் புளிப்பின்றி அருமையாக இருக்கும்.இலையுடன் கூடிய காய்கறிகள் அதே ஃப்ரெஷாக இருக்க, பேப்பரில் சுற்றி வைத்தால் போதுமானது.பச்சைப் பட்டாணியை வேக வைக்கும்போது சிறிது வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும். உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறிது வினிகர் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு வகைகளை சமைக்கும்போது சிறிதளவு பூண்டைச் சேர்த்தால் வாயுத்தொல்லை இருக்காது. பூண்டை, தண்ணீரில் போட்டு வைத்து, பிறகு தோலை உரித்தால் எளிதாக உரிக்க முடியும்.ஊறுகாயுடன் சிறிது மஞ்சள் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.வேக வைத்த முட்டையை அதன் ஓட்டை அகற்றாமல் குளிர்ந்த நீரில் போட்டு, பிறகு அதை ஃபிரிட்ஜில் வைத்தால் இரண்டு, மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும்.மல்லி விதையைச் சிறிதளவு நெய்விட்டு வறுத்துப் பொடிசெய்து வைக்கவும். சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை அரை தேக்கரண்டி போட்டு மூடி வைத்தால், சாம்பார் நல்ல மணமாக இருக்கும்.இட்லி மிளகாய்ப்பொடி அரைக்கும்போது சிறிது தேங்காய்க் கொப்பரையைச் சேர்த்து அரைக்க சுவை கூடும்.பக்கோடாவுக்கு மாவு பிசையும்போது, அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய்யும் தயிரும் கலந்தால் பக்கோடா மொறுமொறுவென இருக்கும்.- எம்.நிர்மலா.

சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு நாட்களுக்கு கெடாது. ஆனால் ஒரு முறை சூடுபடுத்திய உணவை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஆய்ந்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் அடுத்த நாள் அப்படியே பயன்படுத்தலாம்.ஃபிரிட்ஜை சமமான இடத்தில் வைக்க வேண்டும். மேடுபள்ளமாக இருந்தால் டோர் சீக்கிரமாக பழுதாகிவிடும்.வாரத்துக்கு ஒருமுறை ஃபிரிட்ஜை சுத்தமான நீரில் துணியை நனைத்து துடைத்து சுத்தம் செய்தால் போதும். துடைத்த பிறகு ஃப்ரிட்ஜில் பாதி எலுமிச்சம் பழத்தை வைத்தால் கெட்ட வாடை இருக்காது.குருமாவுக்கு அரைக்கும்போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா, குழம்பு பதமாக வரும்.சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகள், முட்டை உணவுகள் ஆகியவற்றைச் சமைத்த பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் குழம்பின் சுவையும், தரமும் மாறிவிடும். பருப்பை வேகவைக்கும்போது ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்துவிடும். உப்பை ஜாடியில் கொட்டும்போது ஒரு தேக்கரண்டி சோளமாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.– எம்.ஏ.நிவேதா.

உளுந்து வடை செய்யும்போது, மாவை உருட்டி எடுத்து அரிசி மாவைக் கையால் லேசாக தொட்டுப் பிறகு வடை தட்டிப்போட மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.எந்த ஊறுகாய் செய்தாலும் ஒரு துளி வினிகரை விட்டால் ஊறுகாய் துண்டுகளின் வடிவம் மாறாது.பழுக்காத தக்காளிகளை ஒரு பிரெளன் பேப்பர் கவரில் போட்டு இருளான இடத்தில் வைத்தால் நன்றாகப் பழுத்துவிடும்.தயிர் நன்றாக உறையாவிட்டால் தயிர்ப் பாத்திரத்தை பெரிய பாத்திரத்தால் மூடி வைக்கவும். 3 மணி நேர்த்திற்குள் நன்றாக உறைந்துவிடும்.அடைமாவை இட்லித்தட்டில் ஊற்றி வேகவிட்டு அதை உதிர்த்து உசிலிக்கறி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.சூப், க்ரேவி ஆகியவற்றில் போட க்ரீம் இல்லாவிட்டால் சிறிது பாலை வெண்ணெயில் சேர்த்து கலந்து உபயோகிக்கவும்.சமையலுக்கு அடிகனமான, அகலமான, வாய் அகன்ற, உயரம் குறைந்த பாத்திரங்களை உபயோகிப்பதால் கேஸ் கணிசமாக சேமிக்க முடியும்.பாதாம்பருப்பை தண்ணீரில் போட்டு ஓவனில் 30 நொடிகள் வைத்து எடுத்தால் எளிதாக தோலை உரிக்க முடியும்.– இந்திராணி தங்கவேல்.

கட்லெட் செய்யும்போது பொடியாக நறுக்கிய கீரையைக் கலந்து பிசைந்து பொரித்தால் சுவையும், சத்தும் அதிகமாகும்.அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய்விடும்.ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, தோசை, வடை மாவில் சிறிது சேர்த்து செய்தால் மொறுமொறுப்பு கூடும்.காலிஃப்ளவர், முட்டைகோஸ் கூட்டு செய்யும்போது, அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு ஊற்றிச் செய்தால் ருசியாக இருக்கும்.சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது வாசனை வரவில்லை என்றால், அதில் உப்பு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு சேர்த்து அதில் பச்சை மிளகாயை ஊறவிட்டு எடுத்து பின்னர் காயவைத்து எடுத்து பொரித்தால், மோர் மிளகாயை விட ருசியாக இருக்கும். – மல்லிகா அன்பழகன்.

பச்சை பட்டாணி மலிவாக கிடைத்தால் அதை உரித்து பிளாஸ்டிக் பையில் போட்டு, வாயை இறுகக் கட்டி, ஃப்ரிட்ஜில் வைத்தால், பல மாதங்கள் பச்சை மாறாமல் இருக்கும்.வெண்ணெயில் தூள் உப்பை தூவி வைத்தால் நாள்பட்டாலும் கெடாமல் இருக்கும். பால் பாத்திரம் அடிபிடிக்காமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரில் நன்கு அலசிவிட வேண்டும்.உப்பு பாட்டிலின் அடியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன்மீது உப்பைக் கொட்டி வைத்தால் ஈரம் கசியாமல் இருக்கும். கிழங்குகளை உப்பு கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். அ.யாழினி பர்வதம்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை