கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில் அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம் பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள்.

* ரவை உப்புமாவிற்கு எலுமிச்சம்பழம் பிழியாமல் தேவையான அளவு மாங்காய்ப் ெபாடி ஆம்சூர் சேர்த்தால் உப்புமா மிகவும் ருசியாகவும், புது வாசனையுடனும் இருக்கும்.

* சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும் நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல் இருக்கும்.

– ஆர்.அஜிதா, கம்பம்.

* முலாம்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும். ஒரு அகலமான வாணலியில் அரை கப் சர்க்கரையையும், முலாம்பழக்கூழையும் ஒன்றாகப் போட்டுக் கிளறவும். ஒரு மேஜைக் கரண்டி ஜவ்வரிசியை வறுத்துப் பொடித்த பொடியை கலவையில் போட்டுக்கிளறி இறக்க ‘முலாம்பழ ஜாம்’ தயார்.

* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’ சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி.

* சாதம், சீஸ் துருவல், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, தேங்காய்ப்பால், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகிய பொருட்களை சேர்த்து பிசைந்து, காய்ந்த எண்ணெயில் பக்கோடாக்களாகப் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.

* முளைத்த பச்சைப்பயிறை ஆவியில் வேக வைத்து எடுத்து, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, இதனையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்து பரிமாறலாம்

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* பக்கோடா, வதக்கல் கறி செய்யும்போது ஆம்சூர் பொடி அல்லது கருப்பு உப்பு கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்.

* பகாளாபாத் செய்யும்போது ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அவல் சேர்த்து செய்தால் சாதம் குழைவாக இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும்.

* ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும் வரும்.

* கிரேவி, சூப் வகைகள் நீர்த்துப் போனால் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொதிக்க விட்டால் போதும். கெட்டியான கிரேவி, சூப் ரெடி.

– கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* தோசை வார்க்கும்போது ரொட்டிபோல் வந்தால் சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு தோசை மாவில் கலந்து வார்த்தால் தோசை பூப்போல் மிருதுவாய் வரும்.

* தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்து விடுவதற்குப்பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க சத்தும், ருசியும் அதிகரிக்கும்.

* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்கினால் காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

* சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

– ச.லெட்சுமி, செங்கோட்டை.

* பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

* வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில் ஒரு மாதிரி வாசனை தேங்கி விடும். இந்த வாடையை போக்க நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி தண்ணீரில் கழுவி விட்டு நறுக்கலாம்.

– எஸ். சுமதி, கரூர்.

* சீரகம், மிளகு, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சூடான சாதத்தில் போட்டு சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுவலி, பொறுமல், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

* பச்சை கொத்தமல்லித்தழையை மற்ற சாமான்களை சேர்த்து சட்னி அரைக்கும்போது புளிக்குப்பதில் பச்சைத் தக்காளியைச் சேர்த்து அரைத்தால் நிறமும்,
சுவையும் இருக்கும்.

* வெண்டைக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி சிறிது பெருஞ்சீரகம் தாளித்து ஒரு ஸ்பூன் தயிர், உப்பு, காரப்பொடி கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமலே ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலே அதிக அளவு பாலாடை வந்துவிடும்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

மில்க் கேக்

தேவையானவை:
பால் – ஒரு லிட்டர்,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் – 2 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி,
தண்ணீர் – 1 தேக்கரண்டி.

செய்முறை: எலுமிச்சை சாறுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சவும். பால் நன்றாக வற்றி, கால் பாகமாக மாறியதும், எலுமிச்சைசாறு, தண்ணீர் கலவையை சேர்த்து கலக்கவும். பின்னர் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, பால் கலவையைக் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் அந்த தட்டை லேசாக சூடு செய்து, அகலமான தட்டில் தலை கீழாக கவிழ்த்தால், கேக்கானது தட்டிலிருந்து வெளியே வந்து விடும். அதை துண்டுகளாக்கி உபயோகிக்கலாம். சுவையானது, செய்வது எளிது, அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

– எஸ். பாவனா, திண்டுக்கல்.

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!