மதுபோதையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை: 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் 3 நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், 2 பேர் சேர்ந்து மற்றொருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருக்குறிப்பு தொண்டர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (33), எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது தங்கை கணவர் முரளி (34). இவர் சலவை தொழில் செய்து வருகிறார். கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (45) இவரும் சலவை தொழில் செய்து வந்தார். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை சித்தேரிக்கரை டாஸ்மாக் அருகில் மதுகுடித்து கொண்டிருந்தனர். அதன் பிறகு இரவு மதுபோதை தலைக்கேறி 3 பேரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மதுபோதையில் ரஞ்சித்குமாருக்கும், அருண்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த முரளி எங்க மாமாவையே திட்டுகிறாயா எனக்கூறி ரஞ்சித்தை திட்டி தாக்கியதில் அவர் கீழே சரிந்து விழுந்துள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த அருண்குமாரும், முரளியும் பெரிய கல்லை எடுத்து ரஞ்சித்குமார் தலையில் போட்டதில் அவர் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். அதன்பிறகு இரவு வீட்டிற்கு வந்த அருண்குமார் மற்றும் முரளி ஆகியோர் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி உடையை மாற்றிக் கொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ரஞ்சித்தின் அம்மா, உங்களோடு வந்த எனது மகன் ரஞ்சித்குமார் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் மழுப்பலாக பதில் சொல்லியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரஞ்சித்குமாரின் அம்மா, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அருண்குமார் மற்றும் முரளி ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் ரஞ்சித்குமார் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த ரஞ்சித்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.