சிறுநீரகத்தைக் காக்கும் உணவுமுறை!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் இஷாத்திரி

உடல் திரவங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் சிறுநீரகம், நமது உடலமைப்பில் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது சிறுநீர் வழியாக இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் உபரி நீரை வெளியேற்ற உதவுகிறது. திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் (சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்) போன்றவற்றின் சமநிலையை நிர்வகிப்பது சிறுநீரகத்தின் மற்றொரு செயல்பாடு ஆகும். மேலும், சிறுநீரகமானது அது உருவாக்கும் ஹார்மோன் காரணமாக இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது எலும்பு மஜ்ஜையில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.

மாறிவரும் உணவு விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளால், இந்த முக்கிய உறுப்பு பல நோய்களுக்கு ஆளாகிறது. இதில் மிகவும் பொதுவாக பாதிப்பது நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஆகும். நமது உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலமும், வருடாந்திர சிறுநீரகச் செயல்பாடு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் சிறுநீரக நோய்களைத் தடுக்கலாம் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கலாம். வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் செல்வி. இஷாத்திரி, ஆரோக்கியமான உணவின் மூலம் நமது சிறுநீரகத்தை எவ்வாறு பாதுகாப்பது
என்பதை விரிவாக விளக்குகிறார்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கான உணவு வழிகாட்டுதல்கள்

சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் சிறுநீரகக் கோளாறுகளைத் தடுப்பதற்கும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம். புரதம், உப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு ஆகியவை ஆரோக்கியமான சிறுநீரக உணவில் மிதமானதாக இருக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால், குறைந்த அளவிலான இறைச்சிகள் (கோழி, மீன் மற்றும் முட்டை போன்றவை), பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் மற்றும் சோயா பொருட்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1.ஆரோக்கியமான எடைக்கான கொள்கையை வகுக்கவும். சமச்சீர் உணவுக்கு, ஒவ்வொரு உணவு வேளையிலும் MyPlate நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சிக்கவும். உணவில் பாதி பகுதி பழங்கள் மற்றும் காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் மூன்றில் ஒரு பங்கு தானியங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பது நல்லது.

2.உப்பை அளவாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

3.விலங்கு மற்றும் தாவர புரதம் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு சீரான உணவை உட்கொள்வது நல்லது, ஏனெனில் அதிகப்படியான புரதம் சிறுநீரகத்தை தேவையானதை விட கடினமாக வேலை செய்ய வைக்கிறது.

4.நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டு உணவுகளை தேர்ந்தெடுக்கவும். எளிய கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​இது மெதுவாக ஜீரணிக்கப்படுகிறது மற்றும் குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் சீராக வெளியிடுகிறது.

5.ஆரோக்கியமான இதயத்தையும் சிறுநீரகத்தையும் பராமரிக்க, கொழுப்பு உட்கொள்ளலைக் குறைத்து, டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

6.ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மது அருந்துவதையும் புகைப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள்.

நாற்பட்ட சிறுநீரக கோளாறு மற்றும் டயாலிசிஸ்-க்கான உணவுத் திட்டங்கள்

சிறுநீரகத்தில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகளைக் கண்டால், சிறுநீரக நோய்கள் தீவிரமாகக்கூடியவை என்பதால் உங்கள் சிறுநீரக மருத்துவரிடம் பேசுவது அவசியம். சிறுநீரக ஆரோக்கியத்திலும் உணவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாற்பட்ட சிறுநீரக நோய் கண்டறியப்பட்டால், நோயாளி, சிறுநீரக மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரின் சிறுநீரக உணவு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சரியான மருந்து மற்றும் உணவு முறைகளை எடுத்துக் கொண்டால், சி.கே.டி.யின் ஆரம்ப கட்டத்தில் டயாலிசிஸ் தேவைப்படாது. இது நோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

நோய் மற்றும் நோயாளியின் தேவைகளைப் பொறுத்து, உணவு முறை மாறலாம்.

நாற்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு சில உணவு ஆலோசனைகள்

1.கலோரி: சிறிய அளவிலான உணவை அடிக்கடி சாப்பிடுங்கள்.

2.புரதம்: உணவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி புரதத்தைக் கட்டுப்படுத்த அரிசி மற்றும் அரிசிப் பொருட்களைப் பயன்படுத்தவும்.

3.சோடியம்: உணவை மிகவும் சுவையாக மாற்ற, வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு போன்ற புதிய சுவைகளைச் சேர்த்து செயற்கையானவைகளை தவிர்க்கவும்

4.பொட்டாசியம்: உங்கள் காய்கறிகளை வெட்டி கணிசமான அளவு தண்ணீரில் வேகவைத்து அந்தத் தண்ணீரை வடிகட்டி பிறகு சமைக்கவும். ஆப்பிள் அல்லது கொய்யா போன்ற குறைந்த பொட்டாசியம் உள்ள பழங்களை தினமும் தேர்வு செய்யவும்.

5.பாஸ்பரஸ்: அசைவ உணவுகளை குறைத்துக்கொள்ளவும்

6.திரவங்கள்: குளிர்ந்த நீரைக் குடிக்கவும் அல்லது ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தவும்

டயாலிசிஸ் செய்துகொள்ளும் நோயாளிகள் தங்கள் உணவுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பு: சில டயாலிசிஸ் நோயாளிகளின் தேவைகளைப் பொறுத்து உணவு மாற்றங்கள் மிகவும் முக்கியமானது.

டயாலிசிஸ் நோயாளிகளுக்கான உணவுக் குறிப்புகள்

1. கிழங்கு போன்ற வேர் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் கலோரிகளை அதிகரிக்கலாம்.

2.கூடுதல் புரதத்திற்கு, பெசன் மாவு மற்றும் கோதுமை மாவுடன் ரொட்டியை உருவாக்கவும்.

3.சோடியம்: உப்புக்கு பதிலாக சில மசாலாப் பொடிகளை பயன்படுத்தவும்.

4.பொட்டாசியம்: காய்கறிகளில் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்க அவைகளை தண்ணீரில் வேகவைத்து வடித்து உபயோகப்படுத்தவும்

5.பாஸ்பரஸ்: பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான பால் மற்றும் பால் பொருட்கள், கொட்டை வகைகள் மற்றும் பருப்பு வகைகளிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.

6.திரவங்கள்: சிறிய அளவுகளில் மட்டும் குடிக்கவும் மற்றும் உங்கள் உட்கொள்ளலை அளவிட்டு பருகவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

*அதிக சர்க்கரை கொண்ட பழச்சாறு, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள்

*வறுத்த உணவுகள் மற்றும் அதிக எண்ணெய், அதிக கொழுப்பு உள்ள உணவுகள்

*உலர் பழங்களான பேரீச்சம்பழம், திராட்சை மற்றும் முந்திரி, பாதாம், நிலக்கடலை போன்ற கொட்டைகள்.

*நண்டு, இறால், சிவப்பு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாதுகாக்கப்பட்ட இறைச்சி.

*ஊறுகாய், பப்பாளி, உலர் மீன் மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் போன்ற உப்பு நிறைந்த உணவுகள்.

*கோகோ நிறைந்த பானங்கள் மற்றும் சாக்லேட்டுகள்

*புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.

*பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை எந்த வடிவத்திலும் உட்கொள்ளுதல் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக நோய்க்கு இணை உணவுகள் தேவையா?

ஒரு நபருக்கு தினசரி தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாத போது, சப்ளிமெண்ட்ஸ் பொதுவாக தேவைப்படுகிறது.ஒரு நபருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தால் அல்லது டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தால், அவரது உணவில் உணவு வகைகளில் சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் அவர்களுக்குத் தேவையான அனைத்து கலோரிகள், புரதம் அல்லது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்காமல் போகலாம். எனவே, தேவையை பூர்த்தி செய்ய, கூடுதல் இணை ஊட்டச்சத்து தேவைப்படலாம்.

இறுதியாக, சிறுநீரக நோயின் அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தால், உங்கள் சிறுநீரக மருத்துவருடன் கலந்தாலோசிப்பதும், ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக உங்கள் உணவைக் கண்காணிக்க ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதும் முக்கியம்.

Related posts

‘’அதிகரிக்கும் குழந்தையின்மை… குறைத்திட எளிய வழிகள்?’’

குழந்தையின்மைக்கு இலவச ஹோமியோபதி மருத்துவம்…

கொழுப்பை குறைப்போம் ஸ்லிம்மாக மாறுவோம்!