இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் மீட்டு வந்த பெற்றோர் வெட்டிக்கொலை

சித்தூர்: இளம்பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபரிடம் இருந்து பெண்ணை மீட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அவர் பெண்ணின் பெற்றோரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். தெலங்கானா மாநிலம் வாரங்கல் பாதரு சிந்தலதண்டாவை சேர்ந்தவர் னிவாஸ்(45). இவரது மனைவி சுகுணா(40). மகள் தீபிகா(20), மகன் மதன்லால்(19). குண்டங்கா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் பன்னி (24). இவர் தீபிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தீபிகாவை கடத்தி சென்று ஐதராபாத்தில் கட்டாய திருமணம் செய்துள்ளார். ஆனால் இதை விரும்பாத தீபிகா தனது பெற்றோருக்கு தெரிவித்தார். இதுகுறித்து, தீபிகாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தீபிகாவை மீட்டு அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து வீட்டில் இருந்தபடி தீபிகா ஹனுமகொண்டாவில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிகிரி படித்து வருகிறார். இந்நிலையில் தீபிகாவின் பெற்றோர் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதையறிந்த பன்னி கடும் ஆத்திரமடைந்தார். நேற்று அதிகாலை தீபிகாவின் வீட்டுக்கு கத்தியுடன் வந்த பன்னி, தூங்கி கொண்டிருந்த தீபிகாவை எழுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் சத்தம் போட்டுள்ளார்.

அவரை பன்னி கத்தியால் வெட்டினார். இதில் தீபிகாவுக்கு கைகளில் வெட்டு விழுந்தது. இந்த சத்தம் கேட்ட அவரது பெற்றோர் னிவாஸ், சுகுணா, தம்பி மதன்லால் ஆகியோர் அலறியடித்தபடி எழுந்துவந்து தடுக்க முயன்றனர். இதனால் அவர்களையும் பன்னி சரமாரி தாக்கி வெட்டியுள்ளார். இதில் மயங்கி விழுந்த சுகுணா அந்த இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த னிவாசை நர்சம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். தீபிகா மற்றும் அவரது தம்பி மதன்லால் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஹனுமகொண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பன்னியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தீபிகா நிருபர்களிடம் கூறியதாவது: கத்தியுடன் வந்த பன்னி என்னை வெட்டினான். தடுக்க வந்த எனது தம்பியையும் பெற்றோரையும் கண்மூடித்தனமாக வெட்டினான். இதில் என் பெற்றோர் இறந்து விட்டனர். அம்மா அப்பாவை இழந்து நானும் என் தம்பியும் அனாதை ஆகி விட்டோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

Related posts

2வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை: முதல் வெற்றிக்கு முனைப்பு

சென்னையில் இன்று டிஎன்பிஎல் பைனல்: கோவை – திண்டுக்கல் மோதல்

ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா