கார்கேவை சந்தித்துவிட்டு காங்கிரஸில் இணைந்த இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!!

புதுடெல்லி : இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அரியானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசால், விவசாயிகள் விவகாரம், இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் உள்ளிட்டவை முக்கிய விவகாரங்கள், தேர்தல் பிரசாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர். டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கூட வெளியிடவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் அவரது பெயரும் சேர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வினேஷ்போகத் தான் செய்துவந்த இந்திய ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் பணியாற்றியது “என் வாழ்க்கையின் பெருமையான, மறக்கமுடியாத தருணமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வீரர்கள் இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த புதன்கிழமை (செப்.4) டெல்லியில் சந்தித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related posts

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!