82 வயது கார்கேவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதத்துக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி அவமதித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த செவ்வாயன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தில் ராகுல்காந்தியை குறிவைத்து ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மிகவும் ஆட்சேபனைக்குரிய மற்றும் வன்முறை அறிக்கைகளை எழுப்புகிறார்கள். எனவே உங்களது தலைவர்களை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு கூறுங்கள் என்று வலியுறுத்தி இருந்தார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு பாஜ தலைவர் ஜேபி நட்டா எழுதிய பதில் கடிதத்தில், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக வார்த்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக பாஜ தலைவர்களின் புகார்களை சுட்டிக்காட்டி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘சில பாஜ தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் கட்டுப்பாடற்ற அறிக்கைகளை கருத்தில் கொண்டு கட்சி தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமருக்கு ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை, சமச்சீர் உரையாடல் மற்றும் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை இருந்திருந்தால் இந்த கடிதத்துக்கு அவரே பதில் எழுதி இருப்பார். அதற்கு பதிலாக அவர் நட்டாஜி எழுதிய ஆக்ரோஷமான பதிலை பெற்று அனுப்பியுள்ளார். 82 வயதான மூத்த தலைவரை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? இன்றைய அரசியல் விஷம் நிறைந்தது. பிரதமர் தனது பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வேறுமாதிரியாக நடந்து கொண்டு இருக்க வேண்டும். ஒரு மூத்த அரசியல்வாதிக்கு பிரதமர் மரியாதையுடன் பதில் அளித்து இருந்தால் பொதுமக்களிடம் அவர் மீதான கருத்து மற்றும் கண்ணியம் அதிகரித்து இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* பாஜ தலைவரை விட காங்கிரஸ் தலைவர் உயர்ந்தவரா?
பிரியங்காவிற்கு பாஜ பதிலடி ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது எக்ஸ் பதிவில், ‘‘மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஜேபி நட்டா பாஜவின் தேசிய தலைவர். பாஜ தலைவரை விட காங்கிரஸ் தலைவர் உயர்ந்தவரா? மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர். ஆனால் நட்டா மாநிலங்களவையின் அவை தலைவர்.

எதிர்க்கட்சி தலைவர் அவை தலைவரை விட மேலானவரா? சிலர் நாட்டில் உள்ள அனைவரையும் விட மேலானவர்கள் என்று நினைப்பதால் தான் நான் பதிலளிக்கிறேன். நாடாளுமன்ற மரபுகளை புரிந்துகொள்ளாத ஒருவருக்கான பாடம் இது. நாம் அனைவரும் இந்தியாவின் குடிமக்கள். நாம் அனைவரும் சமம். மிகவும் மூத்தவர், பொது வாழ்வில் வாழ்நாள் அனுபவம் உள்ளவர் மற்றும் 140கோடி இந்தியர்களின் பிரதமராக இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது