கேரளத்திற்கு மணம் கூட்டும் குமாரபுரம் பிச்சி!

கேரளாவை ஒட்டி அமைந்த மாவட்டம் என்பதால், பார்ப்பதற்கு கேரளா போலவே தோற்றம் தரும் மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களோடு ரப்பர் போன்ற மரப்பயிர்களும், கிராம்பு, ஜாதிக்காய், நல்லமிளகு போன்ற நறுமணப்பயிர்களும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இப்பகுதியில் மலர் சாகுபடியும் பெரிய அளவில் நடந்து வருகிறது. இங்குள்ள தோவாளை மார்க்கெட் தமிழகத்தின் முக்கியமான பூ மார்க்கெட்டாக விளங்குகிறது. கன்னியாகுமரி மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, சேலம், பெங்களூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்துதான் பெரும்பான்மையான பூக்கள் வியாபாரிகளின் மூலம் கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தோவாளை பூ மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்தப் பூ மார்க்கெட்டை நம்பி பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள், விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், குமரி மாவட்டம் குமாரபுரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் தாமோதரன் என்பவர் பிச்சிப்பூ சாகுபடி செய்து வருவாயை பெருக்கி வருகிறார். அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்து பேசினோம்.

“எங்கள் பகுதியில் பலருக்கும் விவசாயம்தான் வாழ்வாதாரம். இங்கிருக்கிற தோவாளை மலர் சந்தையை நம்பி எண்ணற்ற விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். அதாவது, இந்தப்பகுதியில் இருக்கிற ஆரல்வாய்மொழி, காவல் கிணறு, குமாரபுரம், பழவூர், திருப்பதிசாரம், லாயம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பூ சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக பிச்சி, முல்லை, மல்லிகை, செவ்வந்தி, ரோஸ் உள்ளிட்ட பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இவை அனைத்துமே தோவாளை மலர் சந்தைக்குதான் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. எங்கள் குடும்பத்திலும் கூட எனது தந்தை கடந்த 60 வருடமாக பூ சாகுபடி செய்து வருகிறார். நான் எல்லைப்
பாதுகாப்பு படையில் வீரராக 23 ஆண்டு காலம் பணியாற்றி கடந்த 2011ம் ஆண்டு விருப்ப ஓய்வு ெபற்றேன். பின்னர் முழுநேரமாக விவசாயத்தை செய்து வருகிறேன். தற்போது 50 சென்ட் நிலத்தில் பிச்சி பூ, 50 சென்ட் நிலத்தில் வெண்டை, 50 சென்ட் நிலத்தில் கத்தரிக்காய், 4 ஏக்கரில் வாழை, ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டு வருகிறேன். இதுதவிர வெள்ளரிக்காய், பூசணிக்காய் என மொத்தம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறேன்.

மலர் சாகுபடி செய்து வருவதால் தினசரி வருமானம் கிடைக்கிறது. இதனை பராமரிக்க குறைந்த செலவே ஆகிறது. நான் பல பயிர்களை சாகுபடி செய்து வந்தபோதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் பிச்சிப்பூ சாகுபடியில் இறங்கினேன். பிச்சிப்பூ கன்றுகளை வேறு இடங்களில் வாங்காமல் நானே எனக்குத் தேவையான கன்றுகளை பதியம்போட்டு உருவாக்கினேன். பதியம் போட்டு ஒரு மாதத்தில் வேர்விட்டு, முளைப்புகள் வந்துவிடும். அதன்பிறகு அதனை லாவகமாக எடுத்து நடவு செய்து, 50 சென்ட் நிலத்தில் மொத்தம் 150 பிச்சி செடிகள் சாகுபடி செய்து வருகிறேன். நாம் சரியாக பராமரித்து வந்தால், பிச்சிச் செடிகள் பல ஆண்டுகளுக்கு நமக்கு வருமானத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். பிச்சியைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்து செய்ய வேண்டும். செடிகளுக்கு இடையில் களைகள் முளைக்காத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை புழு மற்றும் கொசு தாக்காமல் இருக்க வேளாண்துறை பரிந்துரை செய்யும் மருந்துகளை வாங்கி அடிக்கிறேன். குமரி மாவட்டத்தில் இரு பருவ மழை பெய்து வருகிறது. மழை பெய்து முடிந்தவுடன், பிச்சிச் செடிகள் உள்ள தோட்டத்தில் மண்ணை கிளறி விடுவேன். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மூட்டிற்கு 10 கிலோ வீதம் சாணம் உரம் வைத்து வருகிறேன்.

தோட்டத்தில் தினமும் பூ அறுவடை செய்ய வேண்டும். இதற்காக தினமும் தொழிலாளர்கள் காலையில் பிச்சிப் பூக்களை பறிக்க வருவார்கள். அவர்களுக்கு ஒரு கிலோ பூ பறித்தால், ரூ.50 கூலியாக கொடுக்க வேண்டும். வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் அதிக மகசூல் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் தினமும் 50 சென்ட் நிலத்தில் இருந்து 5 கிலோ பூ வரை அறுவடை செய்வோம். முகூர்த்த தினங்கள், திருவிழாக்கள் வரும் நாட்களில் அதிக விலைக்கு பிச்சிப்பூ விற்பனையாகும். இதனால் வருமானமும் அதிக அளவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் கிலோ ரூ.250, 500, 1000 என விலை போகும். சீசன் காலத்தில் 10 நபர்கள் தினமும் பூ பறிப்பார்கள். ஜூன், ஜூலை மாதத்தை தவிர மற்ற மாதங்களில் பிச்சிச் செடிகளில் பூக்கள் அதிகம் பூப்பது இல்லை. இருப்பினும், அந்தச் செடிகளை நாம் பராமரித்து, தினமும் பூக்கும் பூக்களை பறித்து, விற்பனை செய்யவேண்டும். சீசன் இல்லாத காலகட்டத்தில் 4 நபர்கள் தினமும் பூக்களைப் பறிக்க வருகிறார்கள். அவர்களுடன் நானும் பூக்களைப் பறித்து வருகிறேன். மழை பெய்யும்போதும், பனியின் தாக்கம் இருக்கும்போதும் மகசூல் குறையும். தற்போது குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், மகசூல் குறைவாக இருந்து வருகிறது.

மேலும் இரவு நேரத்தில் பனியின் தாக்கமும் அதிகம் இருப்பதால் பூ குறைவாக பூக்கிறது. மழை, பனியின் தாக்கம் இருப்பதால், பூக்கள் சேதமாகும். செடிகளின் மேல்பகுதியில் சூரிய ஒளி கிடைப்பதால் பச்சையாக காட்சி அளிக்கும். ஆனால் கீழ் பகுதியில் உள்ள கிளைகள் பச்சையத்தை இழந்து, காய்ந்து இருக்கும். அவற்றை நாம் அவ்வப்போது அகற்றிவிடவேண்டும். அப்போதுதான், நாம் அகற்றிவிட்ட இடத்தில் இருந்து புதிதாக முளைக்கும். காய்ந்த கிளைகளை நாம் அகற்றவில்லை என்றால், செடிகள் பட்டுப்போகும். இதனை நாம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பிச்சிச் செடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாததால், தினமும் நமக்கு வருமானம் கிடைக்கும். 50 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ள பிச்சிச் செடிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு சம்பளம், உரம், பூச்சி மருந்துக்கு என மொத்தம் சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகும். செலவு போக மிச்சம் ரூ.75 ஆயிரம் வரை நமக்கு லாபமாக கிடைக்கும். அறுவடை செய்யும் நாட்களில் அதிக விலை இருந்தால், அதிக லாபம் கண்டிப்பாக கிடைக்கும்’’ என்கிறார்.

சென்ட் தொழிற்சாலை தோவாளை பூ மார்க்கெட்டிற்கு பல மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. விசேஷ நாட்களில் அதிக பூக்கள் விற்பனையாகும். இதர நாட்களில் பூக்கள் தேக்கம் அடைந்து வருகிறது. விற்பனை ஆகாத பூக்களை வியாபாரிகள் குப்பையில் கொட்டிச்செல்லும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதிகமாக பூக்களைக் கொண்டு செல்லும்போது குறைவான விலையே கிடைக்கும். இதனால் தோவாளை பூ மார்க்கெட்டை மையப்படுத்தி பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சென்ட் தொழிற்சாலையை அரசு அமைத்தால், பூ விவசாயிகள், வியாபாரிகள் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்பு உள்ளது’’ என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது