கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கேரளா வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

அப்பகுதியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதை நான் அறிந்தேன். முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் ஆதரவை நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்