கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: கேரள மாநிலம் மலப்புரத்தில் 24 வயது இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அவருடன் தொடர்பில் இருந்த 170க்கும் மேற்பட்டோரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தமிழக – கேரள எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்தார். இதனால் தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் நிபா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட எல்லையோர சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  வேறு மாநிலத்தில் இருந்து அறிகுறிகளோடு வந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சந்தேகிக்கும் வகையில் அறிகுறி உள்ள நபர்களை தனிமைபடுத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் (தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல்) தொடர்ந்து இருந்தால் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் சுகாதாரத்துறை தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடுமையான மூளையழற்சி நோய்க்குறி (AES) இருக்கும் நோயாளிகள் விவரத்தை சுகாதாரத்துறை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக மலப்புரத்திற்கு அருகில் உள்ள மாவட்டத்தில் மூளையழற்சிக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தொடர்ந்து கண்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு