Saturday, September 28, 2024
Home » கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை

கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை

by Karthik Yash

* நாமக்கல்லில் சுற்றிவளைத்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்றதால் என்கவுன்டர்
* ஒருவன் குண்டு காயத்துடன் சிக்கினார்
* துப்பாக்கி முனையில் அரியானா கும்பல் கைது

சேலம்: கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்.,களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு கன்டெய்னரில் தப்பி வந்த அரியானா கொள்ளை கும்பலை நாமக்கல்-சேலம் எல்லையில் போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஒரு கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், ஒருவன் குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறான். 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள மாப்ராணம், கோலழி, சொராணூர் ரோடு ஆகிய இடங்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்கள் உள்ளன.

இந்த 3 ஏடிஎம்களும் நேற்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் உடைக்கப்பட்டன. இதனால் அபாய எச்சரிக்கை அழைப்பு, அந்தந்த வங்கியின் மேலாளர்களின் செல்போன்களுக்கு சென்றது. உடனே வங்கி மேலாளர்கள், அருகேயுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாப்ராணம், கோலழி, சொராணூர் ரோடு ஆகிய 3 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கும் போலீசார் விரைந்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அந்த ஏடிஎம் இயந்திரங்கள் காஸ் கட்டர்களை கொண்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு வெள்ளை நிற காரில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து காஸ் கட்டர்களை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 3 இடத்திலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதையும் போலீசார் உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்சூர் நகர போலீஸ் கமிஷனர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த 3 ஏடிஎம்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.65 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க கேரள மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கொள்ளையர்கள் தமிழ்நாடு வழியாக தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால், தமிழ்நாடு போலீசாரையும் கேரளா போலீசார் உஷார்படுத்தினர். இதன்பேரில் தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு, சந்தேகப்படும்படி வரும் கார், கன்டெய்னர்களை கண்காணித்தனர். நேற்று காலை 9 மணியளவில் கோவையில் இருந்து ஈரோடு, பெருந்துறை வழியாக சந்தேகப்படும்படியாக கன்டெய்னர் வருவதை போலீசார் உறுதிபடுத்தினர்.

அந்த கன்டெய்னர், நாமக்கல், சேலம் வழியே கர்நாடகா செல்ல இருப்பதை அறிந்து நாமக்கல், சேலம் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு, அந்த கன்டெய்னரை தேடினர். அதில், பெருந்துறையில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியே கன்டெய்னர் வருவதை கண்டுபிடித்து, அதனை போலீசார் பின்தொடர்ந்தனர். நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணா தலைமையில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் போலீசார், பின்தொடர்ந்து கன்டெய்னரை விரட்டி வந்தனர். அந்த கன்டெய்னர், நாமக்கல்-சேலம் எல்லையான பச்சனம்பாளையம் பகுதியில் வந்தபோது திடீரென சர்வீஸ் சாலைக்கு திரும்பி மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி சென்றது.

இதனால், போலீசார் மிக வேகமாக விரட்டிச் சென்றனர். அப்போது சாலையில் குறுக்கே வந்த கார், பைக்குகள் மீது மோதியபடி கன்டெய்னர் மின்னல் வேகத்தில் பறந்தது. சிறிது நேரத்தில் வெப்படை வரை சென்ற அந்த கன்டெய்னர், மற்றொரு சாலையில் யூ டர்ன் எடுத்து, மீண்டும் சேலம் நோக்கி வந்தது. நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள சங்ககிரி சன்னியாசிபட்டி கேட் பகுதியில் வந்தபோது, ஏற்கனவே அந்த கன்டெய்னரால் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள், கற்களை கொண்டு கன்டெய்னர் லாரி டிரைவர் மீது வீசினர். இதில் கண்ணாடி உடைந்து, சாலையின் நடுவே கன்டெய்னர் நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார், கன்டெய்னரை சுற்றி வளைத்தனர். பின்தொடர்ந்து வந்த நாமக்கல் எஸ்பி ராஜேஸ்கண்ணா தலைமையிலான போலீசாரும் வந்து, துப்பாக்கி முனையில் சுற்றினர். இதற்கு மேல் எங்கும் தப்பிக்க இயலாது எனக்கருதிய டிரைவர், தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது கன்டெய்னரின் அடியில் இருந்து, துவாரம் வழியே மற்றொருவர் வெளியே வந்தார். தப்பிக்க முயன்ற அவரையும் போலீசார், விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். 2 பேர் போலீசில் சிக்கிய நிலையில், கன்டெய்னருக்குள் ஒரு கார், ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

வட மாநில கொள்ளையர்களான அவர்கள், கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதனால், அந்த இடத்தில் வைத்து கன்டெய்னரை போலீசார் திறக்கவில்லை. நாமக்கல் எஸ்பி தலைமையிலான போலீசார், கன்டெய்னரை பள்ளிபாளையம் அருகேயுள்ள வெப்படை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். கன்டெய்னரை பிடிபட்ட டிரைவரே ஓட்டினார். அந்த கன்டெய்னரின் முன்புறமும், பின்புறமும் போலீஸ் வாகனங்கள் சென்றன. வெப்படை தோப்புக்காடு என்ற இடத்தில் சென்றபோது, கன்டெய்னரின் உள்ளே கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டது. அதனால், கன்டெய்னரை டிரைவர் நிறுத்தினார்.

உடனே வெப்படை இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், டிரைவருடன் சென்று கன்டெய்னர் கதவை திறந்தனர். அப்போது, உள்ளே இருந்து ஒருவன், ஒரு பேக்குடன் கீழே குதித்தான். அந்த நபர், இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிவிட்டு, தப்பியோடினான். அந்த நேரத்தில் அருகில் நின்றிருந்த டிரைவரும் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்ஐ ரஞ்சித்பிரியனை தள்ளிவிட்டு விட்டு தப்பியோடினான். இதனால், பின்தொடர்ந்து காட்டுப்பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் ஓடினர். அங்கிருந்த ஓடையில் டிரைவர் விழவும், அவனை எஸ்ஐ ரஞ்சித்பிரியன் பிடித்தார்.

அப்போது அவரை தாக்கிவிட்டு, மீண்டும் தப்பிக்க முயற்சித்தான். இதனால், இன்ஸ்பெக்டர் தவமணி, தப்பிய இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டார். அதில், டிரைவரின் மார்பில் குண்டு பாய்ந்தது. மற்றொருவனுக்கு காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தான். உடனே 2 பேரையும் மீட்ட போலீசார், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் டிரைவர், வரும் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த மற்றொருவனை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே கன்டெய்னருக்குள் பதுங்கி இருந்த மேலும் 5 பேரை எஸ்பி ராஜேஸ்கண்ணா தலைமையிலான போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர். மேலும், அந்த கன்டெய்னரில் பதிவெண் இல்லாத ஒரு சொகுசு கார், ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.65 லட்சம் பணம் இருந்தது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை ஆகியோர் சென்றனர். அவர்கள், பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்த இர்பான், சபீர்கான் (26), சவ்கீன், முபாரிக் மற்றும் நூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இக்ரம்(42) எனத்தெரியவந்தது.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானது, அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்த ஜூமான் (40) என்றும், படுகாயமடைந்தது நூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசர்அலி(30) என்றும் தெரியவந்தது. இக்கொள்ளை கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன் கேரளா சென்றுள்ளனர். அங்கு திருச்சூரில் 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்துள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர். கொள்ளையன் ஆசர்அலி தப்பியோடிய போது பேக்கில் பணத்தை எடுத்துச் சென்ற நிலையில், அது ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. அந்த 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் சேகரித்தனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அரியானா கொள்ளை கும்பலை பிடித்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த அரியானா கொள்ளை கும்பலை நாமக்கல் எல்லையில் தமிழக போலீசார், சினிமாவில் வருவது போல் விரட்டிச் சென்று சுட்டுப்பிடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* போலீசாரை கண்டு திரும்பிய கன்டெய்னர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு காலையில் வந்த கன்டெய்னர் லாரி, அங்குள்ள டோல்கேட் அருகே முதலில் வந்துள்ளது. அங்கு போலீசார் வாகன சோதனையில் இருப்பதை கண்டு டிரைவர் மீண்டும் பள்ளிபாளையம் ேநாக்கி கன்டெய்னரை திருப்பியுள்ளார். இதனால் சந்ேதகம் அடைந்த போலீசார் சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சன்னியாசிபட்டி அருகே கன்டெய்னரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் டிரைவர் அசுர வேகத்தில் கன்டெய்னரை ஓட்டி, ரோட்டில் வந்த வாகனங்கள் மீது மோதிச்சென்றதால் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனால் பொதுமக்களும் கன்டெய்னரை துரத்த ஆரம்பித்தனர். இதையடுத்து துரிதகதியில் செயல்பட்ட போலீசார், அதிரடியாக விரட்டிச் சென்று கன்டெய்னரை நிறுத்தினர்.

* கூகுள் மேப்பில் பிளான் போடும் பலே கில்லாடிகள்
கொள்ளையர்கள் 2 பிரிவாக அரியானாவில் இருந்து சரக்கு லாரியில் சென்னை வழியாக கேரளா சென்றுள்ளனர். இதில் ஒரு பிரிவினர் காரிலும், மற்றவர்கள் கன்டெய்னர் லாரியிலும் வந்துள்ளனர். சரக்குகளை இறக்கி விட்டு திருச்சூர் சென்றுள்ளனர். கூகுள்மேப் மூலம் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் இருக்கும் இடங்களை தேடி கண்டுபிடித்து, காரில் சென்று காஸ் கட்டர் மூலம் ஏடிஎம் கதவை உடைத்து, அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்துள்ளனர். திருச்சூரில் 3 ஏடிஎம்களில் கைவரிசை காட்டிவிட்டு வந்துள்ளனர். ஸ்டேட் பாங்க் ஏடிஎம்களில் அதிக அளவில் பணம் வைப்பதை அறிந்து, அந்த ஏடிஎம்களை குறி வைத்து உடைத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

* அரியானா ‘மேவாட்’ கொள்ளையர்கள்
நாமக்கல் போலீஸ் பிடியில் சிக்கியுள்ள 6 கொள்ளையர்களும் அரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள், அரியானாவில் உள்ள மேவாட் கொள்ளையர்களாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபடுவதில், கைதேர்ந்தவர்கள் அவர்கள்தான். அதனால், சிக்கிய கொள்ளையர்களின் பின்புலம் குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதான இக்கொள்ளையர்கள் மீது இதுவரை வேறு எங்கும் வழக்கு இல்லை. தற்போது தான், இங்கு சிக்கியுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் தென் மாநிலங்களில் 15 ஏடிஎம்களில் கொள்ளை நடந்திருக்கிறது. அதனால், அவை அனைத்திலும் இவர்கள்தான் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

* சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேசிங்
கன்டெய்னர் லாரி திருச்சூரில் இருந்து கோவை, ஈரோடு வழியாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதிக்கு வந்துள்ளது. ஏற்கனவே உஷாராக கண்காணித்து நின்ற போலீசார், அந்த கன்டெய்னரை மடக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அசுர வேகத்தில் கன்டெய்னர் பறந்துள்ளது. இதையடுத்து சுமார் 5 கிலோ மீட்டர் விரட்டிச்சென்ற போலீசார், சங்ககிரி அருகேயுள்ள சன்னியாசிப்பட்டியில் தடுத்து நிறுத்தினர். அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த கன்டெய்னர் 2 கார்கள் மற்றும் 4 பைக்குகள் மீதும் மோதியுள்ளது. இதனால் அவர்களும் கன்டெய்னரை துரத்த ஆரம்பித்துள்ளனர். ஒரு கட்டத்தில் 5 கிலோ மீட்டர் தூரமும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆக்‌ஷன் படங்களை மிஞ்சும் அதிரடி சம்பவங்கள் ஈரோடு-சங்ககிரி சாலையில் நடந்தது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

* வாடகைக்கு எடுக்கப்பட்ட கன்டெய்னர்
அரியானா கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரி, அரியானா மாநிலத்தை சேர்ந்த சலீம்கான் என்பவருக்கு சொந்தமானது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர், 12 கன்டெய்னர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். அந்த 12 கன்டெய்னர்களையும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த தனியார் நிறுவனத்தாரிடம் இருந்துதான், கொள்ளையர்கள் இந்த கன்டெய்னரை எடுத்து வந்துள்ளனர் என்பதும் தெரிந்துள்ளது.

* நீதிபதி விசாரணை
கொள்ளையனை என்கவுன்டர் செய்த இடத்தில் நேற்று இரவு குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி, விசாரணை மேற்கொண்டார். பின்னர் கொள்ளையர்களின் கன்டெய்னர் லாரி, அதில் இருந்த கார் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர், கொள்ளையர்கள் தப்பியோடிய போது, போலீசார் சுட்டுக் கொன்ற ஓடை பகுதியையும், நேரில் பார்வையிட்டு போலீசாரிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

* கேரள போலீஸ் வருகை
ஏடிஎம் கொள்ளை நடந்த இடம் கேரளமாநிலம் திருச்சூர் என்பதால் பணம் மற்றும் குற்றவாளிகளை அவர்களிடம் ஒப்படைக்க தமிழக போலீசாரால் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சூர் இன்ஸ்பெக்டர் டிஜோ தலைமையிலான 10பேர் கொண்ட தனிப்படை போலீசார் நாமக்கல் வந்தனர். அவர்கள் வெப்படை காவல்நிலையத்திற்கு வந்து விவரங்களை பெற்றுக் கொண்டனர்.

* சிதறிய ரூ.500 நோட்டுகள்
டிரைவர் ஜூமான் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடும் போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நீலநிறப்பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்து சிதறி பறந்தது.

* எஸ்.பி அதிரடியால் அரை மணி நேரத்தில் சுற்றிவளைப்பு
திருச்சூரில் இருந்து ஏடிஎம் கொள்ளையர்கள் பாலக்காடு வந்து தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டம் வழியாக செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று நாமக்கல் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணனுக்கு காலை 8.30மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அவர், திருச்செங்கோடு, பரமத்தி, ராசிபுரம் என்று அனைத்து பகுதிகளிலும் போலீசாரை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் நாமக்கல் தனிப்படை போலீசாருடன் வெப்படை நோக்கி விரைந்தார். அங்கிருந்து சற்றும் யோசிக்காமல் சேலம் எல்லையான சன்னியாசிப்பட்டிக்கும் வந்து போலீசாரை முடுக்கி விட்டு தானும் அதிரடியாக களம் இறங்கினார். அவரது அதிரடி நடவடிக்ைகயால் 9 மணிக்குள், அதாவது அரை மணிநேரத்தில் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் வந்த கண்டெய்னர் மடக்கி பிடிக்கப்பட்டது. இதற்காக நாமக்கல் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதேபோல் சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசாரை திருச்சூர் டிஎஸ்பி ஜிஜோ வெகுவாக பாராட்டியுள்ளார்.

* கொள்ளைக்கு சொகுசு கார் தப்பிப்பதற்கு கன்டெய்னர்
சிக்கிய அரியானா கொள்ளையர்கள், ஏடிஎம் கொள்ளைக்காக கிரேட்டா காரை பயன்படுத்தியுள்ளனர். கொள்ளையில் ஈடுபடும் இடத்தின் அருகே காட்டுப்பகுதியாக பார்த்து, சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடத்தில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்துள்ளனர். பிறகு கிரேட்டா காரில் ஏடிஎம் மையங்களுக்கு சென்று, அதனை காஸ் கட்டர் கொண்டு உடைத்து கொள்ளையை அரங்கேற்றிவிட்டு, காரில் கன்டெய்னர் இருக்கும் இடத்திற்கு தப்பி வருகின்றனர். பின்னர், கன்டெய்னரில் 2 ஏணிகளை கொண்டு காரை ஏற்றிவிட்டு, அடுத்த இடத்திற்கு தப்பிக்கின்றனர். அப்படி தப்பி வந்தபோது தான், நாமக்கல்லில் சிக்கிக் கொண்டனர், என டிஐஜி தெரிவித்தார்.

* கன்டெய்னரில் சுவாசிக்க காற்று வர ஏதுவான வசதி
கொள்ளையர்கள் பிடிபட்ட கன்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் ஓரிடத்தில் துவாரம் உள்ளது. அந்த துவாரம், முழுமையாக மூடப்பட்டிருக்கும் போது உள்ளே இருக்கும் நபர்கள் சுவாசிக்க காற்று வரும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்வழியே காற்றை சுவாசித்தபடியே 6 பேர் கொள்ளை கும்பல் உள்ளே பதுங்கியிருந்து வந்துள்ளனர். சன்னியாசிபட்டி பகுதியில் கன்டெய்னரை மடக்கிய போது ஒருவன், அந்த துவாரம் வழியாகவே கீழே குதித்து தப்பிக்க முயன்றான். அவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

* எஸ்பிஐ ஏடிஎம்கள் மட்டுமே குறி
கொள்ளையர்கள் தப்பி வந்த கன்டெய்னரில் 7 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஸ்டேட் பாங்க் ஏடிஎம்களை மட்டுமே குறி வைத்து கொள்ளையடித்துச் செல்பவர்கள் என தெரியவந்துள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையிலும், இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

4 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi