கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா

டெல்லி: கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்து கேரளா எம்பிக்கள் பேசி வருகின்றனர்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவை புரிந்துகொள்ளுங்கள்: கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ்

அந்த வகையில் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கோரிக்கை வைத்தார். பின்னர் பேசிய அவர் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவை புரிந்துகொள்ளுங்கள்.பெரும் நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் 2 தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 45 நிவாரண முகாம்களில் 4,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 3,782 நிலச்சரிவுகள் நாட்டில் பிற்பட்டுள்ளன.

பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கையை தொடங்கவுள்ளனர்: எம்.பி. ஜெபி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோர் தங்கள் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கவுள்ளனர் என எம்.பி. ஜெபி மக்களவையில் பேசினார். பெரும் பேரழிவுகளை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து ஏந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. பேரில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர் பேசினார். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வயநாடு நிலச்சரிவு குறித்து மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,

கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித்ஷா

கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஜூலை 23 அன்றே கேரளாவுக்கு கடும் மழைப் பொழிவுக்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. எச்சரிக்கை கொடுக்கும் அமைப்பின் மீது குற்றச்சாட்டு முன்வைத்ததால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒன்றிய அரசின் எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும்: அமித்ஷா

தயவு செய்து ஒன்றிய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்துப் பார்க்க வேண்டும். எங்கள் பேச்சைக் கேளுங்கள் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தோம். குஜராத் மாநிலத்திற்கு புயல் எச்சரிக்கை கொடுத்தோம்; அங்கு சிறு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. மழை, வெள்ளம், புயல், வெப்ப அலை என அனைத்துக்கும் ஒன்றிய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. பேரிடர் ஏற்படும் எனத் தெரிந்து 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவுக்கு அனுப்பிவைத்தோம்.

கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது?: அமித்ஷா

முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார். இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது. எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கேரள மாநிலத்திற்கு ஒன்றிய அரசு துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 2,327 இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒரு லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்