கேரளாவில் வேகமாக பரவுகிறது நிபா வைரஸ் பாதித்த 14 வயது சிறுவன் பலி

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்ததை தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் நேற்று மரணமடைந்தான். இதைத் தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த 2018க்கு பின்னர் 5வது முறையாக மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த அஷ்மில் (14) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தான்.

நிபா பாதித்து மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அஷ்மில் அனுமதிக்கப்பட்ட கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அஷ்மிலின் வீடு உள்ள பாண்டிக்காடு பஞ்சாயத்து மற்றும் படித்த பள்ளி உள்ள ஆனக்கயம் பஞ்சாயத்து பகுதிகளில் பேரிடர் தடுப்பு மற்றும் பொதுமக்கள் சுகாதார சட்டத்தின்படி தீவிர கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட கலெக்டர் வினோத் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் இந்த 2 பஞ்சாயத்துகளிலும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு 50 பேருக்கு மேல் கூடுவதற்கும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள் தவிர ஏனைய கடைகள் மற்றும் ஓட்டல்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். இந்த பஞ்சாயத்து பகுதிகளில் சினிமா தியேட்டர்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது தவிர மலப்புரம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

பொது இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். திருமணம், மரணம் மற்றும் நிகழ்ச்சிகளில் அதிகமான அளவில் ஆட்கள் திரளக் கூடாது. காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். கீழே விழுந்து கிடக்கும் பழங்கள் மற்றும் பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மலப்புரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அஷ்மிலுடன் தொடர்பில் இருந்த மேலும் 2 சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களும், அவர்களது பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அஷ்மில் சிகிச்சை பெற்ற 4 மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 246 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 63 பேருக்கு அஷ்மிலுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளது. இவர்களது ரத்தம், உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நிபா அறிகுறிகளுடன் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* ஒன்றிய சுகாதாரக் குழு கேரளா விரைகிறது

நிபா பாதித்து 14 வயது சிறுவன் மரணமடைந்ததை தொடர்ந்து ஒன்றிய சுகாதாரத் துறை கேரள அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. மரணமடைந்த சிறுவனுடன் 12 நாள் முன்பு வரை தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மோனோகுளோனல் என்ற ஆன்டிபயாடிக் மருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரக் குழுவும் கேரளாவுக்கு வருகிறது. இக்குழு நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அறிவுரைகளை வழங்கும்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை