கெல்லீஸ் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து ஓடிய 5 சிறுவர்கள் மீட்பு

பெரம்பூர்: கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பிய 5 சிறுவர்களை மீட்டு ஒரு சிறுவனை தேடி வருகின்றனர். சென்னை கெல்லீசில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 23 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.30 மணி அளவில், சீர்திருத்த பள்ளியில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டதால் காவலாளி சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு சிறுவர்கள் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியபோது சென்னை மணலி காவல் நிலையத்தில் குற்றவழக்கில் கைதான 18 வயது சிறுவன் ஒருவன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கடந்த 2ம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலம் உடைத்து தப்பித்துள்ளார். இதன்பின்னர் அந்த சிறுவன் அனைத்து அறைகளையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பவைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பிய 6 சிறுவர்களை போலீசார் தேடிவந்தனர். அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை கோயம்பேடு பகுதியில் 3 சிறுவர்களை பிடித்தனர். பட்டினம்பாக்கம் பகுதியில் ஒரு சிறுவனை பிடித்தனர். இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த சிறுவனை இன்று காலை மீண்டும் காப்பகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். இதன் மூலம் தப்பியோடிய 6 சிறுவர்களில் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து தப்பியோடிவிட்ட வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி