கேளம்பாக்கத்தில் உள்ள மின்நிலையத்தின் தரத்தை உயர்த்த கோரிக்கை: தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் அவதி

திருப்ேபாரூர்: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஊராட்சியில் கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இவற்றில் ராஜேஸ்வரி நகர், சுசீலா நகர், கிருஷ்ணா நகர், சீனிவாசா நகர், எல்லையம்மன் நகர், ஜோதி நகர், நந்தனார் நகர், கே.எஸ்.எஸ். நகர், அஜீத் நகர், சாமுண்டீஸ்வரி நகர், மகாலட்சுமி அவென்யூ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

மக்கள் தொகையும் கணிசமாக அதிகரித்து உள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், சைவ, அசைவ ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவையும் உள்ளன. இதனால், இப்பகுதியில் மின்தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கேளம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றது. அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு மின் வழங்கல் நிலையத்தின் தரம் உயர்த்தப்படாததால் கேளம்பாக்கம் மற்றும் சாத்தங்குப்பம் ஆகிய பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியான மின் வெட்டு, அடிக்கடி மின் தடை, குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்னைகள் தீரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின் வாரிய நிர்வாகத்தை அணுகி மனு அளித்தும், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மின் வாரிய நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை என்றும், மின் வழங்கல் நிலையத்தின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர். கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது.  அந்த பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் மின் வாரிய நிர்வாகம் கேளம்பாக்கத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளாட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் தடை காரணமாக கேளம்பாக்கம் பகுதியின் வளர்ச்சி தடைபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்