கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ₹3 கோடி மதிப்புள்ள 20 சென்ட் அரசு நிலத்தினை வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கையால் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கேளம்பாக்கம் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 20 சென்ட் தரிசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த, நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்தனர்.

இதையடுத்து, கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும் என்றும். அந்த இடத்தில் கேளம்பாக்கம் மகளிர் காவல் நிலையம் அல்லது குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்க உள்ளதாகவும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. வேலாயுதம் ஆகியோர் முன்னிலையில் நேற்று அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ₹3 கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்