மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் கைது; கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு ஜாமீனுக்கு தடை பெற்றது அமலாக்கத்துறை. இந்த நிலையில், திகார் சிறையில் இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவர் ரோஸ் அவென்யூ சிபிஐ சிற்பபு நீதிமன்றத்தில், கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதியான அமிதாப் ராவத் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விக்ரம் செளத்ரி மற்றும் விவேக் ஜெயின் ஆகியோர் வாதத்தில், ‘‘டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்துள்ளது என்பது உள்நோக்கம் கொண்டதாகும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அமைப்பு சட்ட ரீதியாக அதன் வேலையை செய்கிறது. அது துரதிர்ஷ்டவசமான செயல்பாடுகள் நடக்குகிறது என்பதை ஏற்க முடியாது. ஒவ்வோரு முறையும் விசாரணை அமைப்பை இப்படி தான் சித்தரித்து பேசுகிறார்கள். நாங்கள் வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை கைது செய்ய உள்ளோம் என்று ஏன் அவர்களது தரப்புக்கு சொல்ல வேண்டும். எங்களது கடமையை நாங்கள் செய்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரையில் 17பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் இருந்து டெல்லிக்கு வந்த ஒரு முக்கிய குழு மதுபானக் கொள்கை திட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விவாதித்துள்ளது.

அவர்களும் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். எனவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் வைத்து விசாரிக்க (ஐந்து நாட்கள்) நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘ அப்ரூவர் மகுந்தா ரெட்டியின் வாக்கு மூலம் அடிப்படையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளர். ஆனால் அந்த மகுந்தா ரெட்டி தற்போது பாஜவில் இணைந்துள்ளார். அவரது குற்றங்கள் அனைத்தும் தூய்மையாகிவிட்டன. ஏற்கனவே நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் இன்னும் சிலரை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக சிபிஐ கெஜ்ரிவாலை தற்போது கைது செய்கிறோம் என்று கூறுவது ஏற்புடையதா, அல்லது கைதுக்கு உரிய காரணமா என்றால் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்த வழக்கில் மகுந்தா ரெட்டி கெஜ்ரிவாலை சந்தித்தேன் ஆனால் மதுபான கொள்கை தொடர்பாக எதுவும் பேசவில்லை, விவாதிக்கவில்லை என முதலில் வாக்குமூலம் அளித்தார். ஆனால் சில தினங்களுக்கு பின்னர் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கிறார். இவ்வாறு முரணாக வாக்குமூலம் அளிக்கும் நபரை எப்படி நம்பமுடியும். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த கைது நடவடிக்கை என்பது ஒரு புனையப்பட்ட போலியான செயல், மேலும் கைது செய்யும் சட்ட வழிமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்று நாட்கள் சிபிஐ அமைப்பு அவர்களது காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், லோதி சாலையில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவர் வரும் சனிக்கிழமை பிற்பகல் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் நேரடி வாதம்
இதில் நேற்றைய விசாரணையின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தரப்பு கோரிக்கைகளை வாதங்களாக முன்வைத்து இருந்தார். அதில்,‘‘டெல்லி புதிய மதுபானக் கொள்கைக்கு மணிஷ் சிசோடியாதான் காரணம் என்று நான் கூறியதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்த சிபிஐ முயற்சிக்கிறது என தெரிவித்தார்.

Related posts

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி