கீரை… மஞ்சள்…மீன் வளர்ப்பு…

கிராமத்தில்தான் விவசாயம் செய்வார்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் விவசாயத்தைத் தொடர்வார்கள் என்பதெல்லாம் பழையகதை. சினிமா நடிகர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள், திருநங்கைகள், ஐ.டி.ஊழியர்கள் என பலரும் இப்போது விவசாயம் பக்கம் திரும்புகிறார்கள். விவசாயம் செய்வது வாழ்வாதாரத்தேவை என்பதை விடவும் விவசாயம் செய்வது நமது கடமை என உணர்ந்த பலரும் இப்போது விவசாயம் செய்ய விரும்புகிறார்கள். அந்த வரிசையில், சென்னையைச் சேர்ந்த கணேஷ் சீனிவாசன் என்பவர் தனது ஐ.டி. பணியைப் பார்த்துக் கொண்டே விவசாயமும் செய்து வருகிறார். எந்த பணியில் எந்த உயரத்திற்கு சென்றாலும் கடைசியில் விவசாயம்தான் முக்கியம் எனச் சொல்லும் கணேஷ், விவசாயத்திற்கென்று சொந்தமாக நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.அவர் பேசும்போது, சென்னைதான் எனக்குப் பூர்வீகம். எம்சிஏ படித்துவிட்டு சோழிங்கநல்லூரில் இருக்கிற ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2014ம் ஆண்டு பெரும்புதூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை ஒன்றை வாங்கினேன். தற்போது அந்த இடத்தில் வீடு கட்ட முடியாத நிலை என்பதால், அதில் விவசாயம் செய்யலாமென முடிவெடுத்து 1,200 சதுர அடி கொண்ட வீட்டு மனைகள் முழுக்க கீரைகளை விதைத்து அறுவடை செய்து என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு வழங்கினேன். இப்படித்தான் விவசாய ஆர்வம் எனக்கு வந்தது. இதில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த விவசாயத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாகவும் அதே சமயத்தில் இயற்கைமுறையிலும் செய்யலாமென யோசித்து விவசாயம் செய்வதற்கென்று தனியாக இடம் தேட ஆரம்பித்தேன்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் குறைந்த விலையில் விவசாய நிலம் தேடியும் கிடைக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாத்தனூர் கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தினை கடந்த 2020 ஆம் ஆண்டு வாங்கினேன், அதனை விவசாய நிலமாக மாற்றி மண் பக்குவத்தை ஏற்படுத்தினேன்.மேலும் இதற்காக வாரத்தில் 2 தினங்களை செலவு செய்ய முடிவு செய்தேன். இதற்கான விவசாய கல்லூரி படிக்கும் பட்டதாரி வாலிபர் ஒருவர் மேலும் 6 தொழிலாளர்களைக் கொண்டு தினந்தோறும் இவர்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக மண்ணைப் பக்குவப்படுத்தி மண் திறனை சோதனை செய்து மண் திறனுக்கு ஏற்ற வகையான பலதரபட்ட கீரைகள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவைகளை அளவான முறையில் பயிர் செய்து அதனை தேவைக்கேற்ற வகையில் விற்பனை செய்து வருகிறேன். இதற்காக சென்னையில் என்னுடன் பணிபுரியும் மற்றும் அவர்கள் சார்ந்த 700 வாடிக்கையாளர்களை இணைத்து வாட்ஸ் அப் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளேன்.

நவீனத்தையும், இயற்கையும் இணைத்து பொதுமக்களுக்கு நல்ல முறையில் கீரைகள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கொடுக்க நினைத்தேன். இதற்காக பிரத்தேகமாக இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைத்துள்ளேன். மேலும் இயற்கை உரத்துக்கு தேவையான காங்கேயம் பசுமாடு 3 உள்ளது. பசுமாட்டில் இருந்து பால் எங்களது தேவைக்கு போக, விற்பனைக்கும் எடுக்காமல் மீதமுள்ள பால் கன்று குட்டிகள் பருகும் வகையில் விட்டுவிடுகிறேன்.பசு மாட்டின் சாணத்தை மட்டும் எடுத்து அதில் பஞ்ச காவியம் உரம் உருவாக்கி விவசாய நிலத்தில் தேவைக்கேற்ப தண்ணீருடன் கலந்து தெளிக்கப்படுகிறது. இதனால் பூச்சி கொல்லியிலிருந்து காப்பாற்றுவதுடன் நெல், கீரை, மஞ்சள் ஆகியவை சீரான முறையில் விளைகிறது. மேலும் மண் தரத்தினை வாரத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யும் கருவியும் உள்ளது. இதனை பராமரிக்க பிஎஸ்சி அக்ரி பட்டதாரி சஞ்சீவி ராமன் என்பவர் விவசாய பணியில் உள்ளார். பட்டதாரி வாலிபரான இவர் முழு நேரமாக இப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

20 நாட்களில் கீரைகளை அறுவடை செய்வதால் உடனுக்குடன் லாபம் கிடைக்கிறது. பெரும்பாலும் அனைவரும் நெல் கரும்பு என பயிரிடுவதால் அதன் விலை எப்போதும் குறைவாக இருக்கிறது. விவசாயத்தில் நஷ்டம் என கூறும் நிலையில், என்னிடம் உள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 13 வகையான கீரைகளை பயிரிட்டு வருகிறேன். முளைக்கீரை, அரைக்கீரை, சிறுக்கீரை, பாலக்கீரை, புதினா, வெள்ளை பொன்னாங்கன்னி, சிகப்பு பொன்னாங்கன்னி, வல்லாரை, கருசலாங்கன்னி, முருக்கை கீரை, முசுமுசுக்கை கீரை, முடக்கத்தான், பன்னைக்கீரை ஆகிய கீரை வகைகளை பயிர் செய்கிறேன்.இதில் வாரத்திற்கு 80 கிலோ வீதம் அறுவடை செய்யப்படுகின்றது. வருடத்தில் 9 மாதங்கள் மட்டுமே மகசூல் தரக்கூடியது என்பதால் ஆண்டுக்கு 2,880 கிலோ அறுவடை செய்து இதனை ஒரு கிலோ ₹108க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆண்டு ரூ80,640க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவிற்கு ₹13 வரை செலவாகின்றன. இதனால் ஆண்டுக்கு கீரை வகையில் மட்டும் ரூ43,200 லாபம் கிடைக்கின்றது.

அதேபோல் 2,400 சதுர அடியில் மஞ்சள் பயிர் செய்யப்படுகிறது. மஞ்சள் பயிர்களுக்கு 9 மாதங்கள் தேவைப்படுகின்றன. இந்த பரப்பரளவில் 3 பகுதிகளாக பிரித்து பயிர் செய்வதால் 4 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்ய முடிகிறது. 2,400 சது அடிக்கு 17 கிலோ மஞ்சள் தூள் கிடைக்கும் வகையில் பயிர் அறுவடை செய்யப்படுகின்றது. இதற்கான செலவு ரூ2,400 ஆகின்றது. 17 கிலோ மஞ்சள் ரூ17 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. தரமான மஞ்சள் என்பதால் எங்களது மஞ்சள் தூளுக்கு மவுசு அதிகமாகவே உள்ளது. இதனால் மஞ்சளில் மட்டும் ஆண்டுக்கு ரூ43,800 வருமானம் கிடைக்கிறது.கீரை வகைகளை மஞ்சள் ஆகியவற்றுக்கு எப்பொழுதும் மவுசு அதிகமாகவே உள்ளன. ஒரு கிலோ மஞ்சள் பொடி ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்கு தேவையான மண்புழு உரம் தயாரிக்கும் பணியையும் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் கெண்டை, ஜிலேபி, தேளி ஆகிய மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்வதால் ஆண்டுக்கு ரூ1 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.

மீன் தொட்டிகளுக்கு கிணற்றிலிருந்து வரும் நல்ல நீரை நிரப்பி, 3 நாட்களுக்கு பிறகு பெரிய தொட்டியில் இருந்து, அங்குள்ள சிறிய அளவிலான மூன்று தொட்டிகளுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மின்மோட்டார் மூலம் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சப்படுகிறது. அதிக அளவில் நீர் சென்றால் நிலத்திலிருந்து மீண்டும் ஒரு தொட்டியில் விழும் வகையில் ஏற்பாடு செய்து அதிலிருந்து பில்டர் ஆகி மீண்டும் மீன் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுவதுடன் எந்த ஒரு பொருளும் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.தொட்டியில் வளர்க்கப்படும் மீன்கள் கடைகளுக்கு விற்பனை செய்து அதிலும் வருமானம் பார்க்கப்படுகிறது. மீன் கழிவுகளை கொண்டு அதற்கேற்ற வகையில் வெள்ளம் கலப்படம் செய்து 40 தினங்கள் ஊர வைத்தால் மீன் அமிலம் உருவாகும். இது இயற்கை விவசாயத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கின்றது. இயற்கை விவசாயம் செய்வதால் பயிருடன் வளரும் புல், பூண்டு செடிகள் வளருவதில்லை. இதனால் 35 சதவீதம் செலவு குறைவாகின்றது. விவசாய வேலைக்கு ஆட்கள் வராத நிலையில் இது போன்ற இயற்கை விவசாயம் செய்வதால் பல்வேறு வகையில் லாபங்களையும் ஈட்ட முடிகின்றது.

மீன்கள் உட்கொள்வதற்கான அசோலா எனும் தண்ணீரில் உருவாகும் பாசிவகையை இயற்கை முறையில் தயாரித்து அதனை மீன்கள் உட்கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 6 தொட்டிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாணம் தண்ணீர் இருந்தால் இந்த அசோலா உருவாகின்றன. ஒரு தொட்டியில் 25 சதவீதம் நிறுத்திக்கொண்டு மீதம் மீன்களுக்கு உணவாக போடப்படுகிறது. இந்த 25 சதவீதம் அசோலா, ஒரு மாதத்தில் 100 சதவீதமாக மாறிவிடுகிறது. இதையே சுழற்சி முறையில் பயன்படுத்துகிறேன் என மகிழ்வோடு பேசி முடித்தார் கணேஷ்.
தொடர்புக்கு:
கணேஷ் சீனிவாசன்: 99625 35302

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது