மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது: கே.சி.வேணுகோபால் விமர்சனம்

டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாதது அவரது கோழைத்தனத்தைக் காட்டுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார். மணிப்பூரில் பாஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு, குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதேபோல் தங்களையும் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க மைத்தேயி குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்தது. இதுவரை 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பல அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முடிவுகள் பலனளிக்கவில்லை. இதனிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் (24ம் தேதி) மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மணிப்பூர் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்; மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மிகவும் தாமதமானது.

53 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பிரதமர் இன்னும் அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதுபோன்ற தீவிரமான விஷயத்தில் பிரதமர் கலந்துகொள்ளாதது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. தோல்விகளை எதிர்கொள்ள அவர் பயப்படுகிறார். எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது. இருப்பினும், அமைதிக்கான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது மணிப்பூரில்தான் நடக்க வேண்டும். டெல்லியில் நடந்தால் இந்த முயற்சி தீவிரம் இல்லாமல் இருக்கும் என்றும் கூறினார்.

Related posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்