காவிரி விவகாரம். பெங்களுருவில் முழு அடைப்பு போராட்டம்; 144 தடை உத்தரவு; தமிழக-கர்நாடகா எல்லையில் பஸ், லாரிகள் நிறுத்தம்!!

பெங்களூரு: காவிரி விவகாரத்தில் பெங்களுருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்கக் கூடாது என வலியுறுத்தி இன்று கர்நாடக தலைநகர் பெங்களுருவில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ்கள் காலை முதல் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. மெட்ரோ ரயில் சேவையும் பாதிப்பின்றி செயல்பட்டு வருகிறது.பெங்களூர் பந்த் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க 14 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநில எல்லைகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் உதகையில் இருந்து இயக்கப்படும் 430க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்துகள் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு மாநில பயணிகள் பெரிதும் அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர். சரக்கு லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பலகோடி ரூபாய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள லாரிகளை தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு முன்பாக நிறுத்தி வைக்கும்படியும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு சூழலுக்கு ஏற்ப லாரி போக்குவரத்து தொடங்கும் என்று தெரிகிறது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை