காட்பாடி பட்டுக்கு கர்நாடகாவில் நல்ல மவுசு!

பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு பல்வேறு மானியங்களை அள்ளி வழங்குவதால், இந்தத் தொழிலில் ஈடுபட விவசாயிகள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா பொன்னை அடுத்த பரமசாத்து கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயி பட்டுப்புழு வளர்ப்பில் பக்கா வருமானம் பார்க்கிறார். பட்டுப்புழுக்களுக்குப் பிடித்தமான மல்பெரித் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுரேஷைச் சந்தித்தோம். பட்டுப்புழு வளர்ப்பு குறித்து நம்மிடம் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“பொன்னைதான் எனக்கு சொந்த ஊரு. என்னுடைய 13 வயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் முதலில் கரும்பு, கேழ்வரகு, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்தேன். 2012ம் ஆண்டு அருகில் இருப்பவரின் தோட்டத்திற்கு ஆய்வுக்கு வந்த தோட்டக் கலைத்துறை அதிகாரி கோவிந்தராஜன் கொடுத்த அறிவுரையின்படி முழு நேரமாக மல்பெரி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது இரண்டரை ஏக்கர் நிலத்தினை இதற்காக ஒதுக்கி இருக்கிறேன். காஞ்சிபுரத்தில் இருந்து மல்பெரி நாற்றுகளை வாங்கி வந்தேன். பன்னிரண்டு வருடத்திற்கு முன்பே ஒரு நாற்று ஒரு ரூபாய் என்ற கணக்கில் வாங்கி வந்தேன். இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு எனக்கு 4300 நாற்றுகள் தேவைப்பட்டது.

பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட முடிவெடுத்த பின் ஆறு மாதங்கள் நிலத்தை நன்கு புழுதி உழவு செய்து பதப்படுத்தினோம். இதில் நாட்டு மாட்டு எரு, மக்கிய குப்பைகளை அடியுரமாக இட்டேன். நிலத்தில் நல்ல மகசூல் கிடைக்க நாட்டு மாட்டுச் சாணத்தை மட்டுமே பயன்படுத்துகிறேன். எச்.எஃப், ஜெர்சி போன்ற மாடுகளின் சாணத்தைப் பயன்படுத்துவது கிடையாது. ஏனெனில் இந்த மாடுகளின் சாணம் மண்ணை மலடாக்கிவிடும். நாட்டு மாட்டுச் சாணத்தோடு காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், சல்பேட் சேர்த்து மல்பெரி செடிகளை நடவு செய்தோம். செடிகளை 10 அடி நீளம், 3 அடி அகலம் என்ற கணக்கில் நடவு செய்தோம். அப்போதுதான் டிராக்டர் மூலம் களை எடுக்க முடியும். மல்பெரி செடிகளை நடவு செய்து 6 மாதத்திற்கு பின்னர்தான் செடிகளை அறுவடை செய்ய வேண்டும். அந்தக் காலகட்டத்தில் 1200 சதுர அடி அளவு கொண்ட பட்டுப்புழு வளர்ப்பதற்கு சிமெண்ட் ஷீட்டுகளால் ஆன செட் அமைத்தோம். இதில் வளர்ப்பதற்கான பட்டுப்புழுக்களை ஆந்திர சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வாங்கி வந்தேன்.

தற்போது ஐம்பதாயிரம் புழுக்கள் வரை இருக்கின்றன. பட்டுப்புழு வளர்ப்பைப் பொறுத்தவரை, தட்பவெப்ப நிலை மிக அவசியம். 20 டிகிரி செல்சியசுக்கு கீழேயும் வெப்பம் இறங்கிவிடக் கூடாது. 25 டிகிரிக்கு மேலேயும் அதிகரிக்கக்கூடாது. காற்றோட்டம் அவசியம். ஷெட் மேலே ஓடு போட்டிருக்கிறோம். புழுவைத் தாக்கும் ஈக்களைக் கட்டுப்படுத்தவும், வெயில் இறங்காமல் இருக்கவும் மேலே வலை கட்டியிருக்கிறோம். இதன்பின்னர் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பட்டுப்புழு வளர்ப்பதற்கு விண்ணப்பம் அளித்தோம். இதில் பட்டுப்புழு முட்டை கொண்டு வந்து எங்கள் ஷெட்டில் வைத்து 15 நாட்கள் பராமரித்தோம். பிறகு பட்டுப்புழு வளர்ப்பதற்கான ஸ்டாண்டுகளில் பட்டுப்புழுக்களை விட்டு காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் மல்பெரி தழைகளை அறுவடை செய்து கொண்டு பூச்சிகளுக்கு தீவனமாக கொடுப்போம்.

இளம் புழுக்களை பொருத்தவரையில் மல்பெரி இலைகளை முதல் 14 நாட்கள் வேகமாக உண்ணும். பிறகு இரண்டரை நாட்கள் தோலுரிக்கும். அப்போது, மல்பெரியை உண்ணாது. இதிலிருந்து 18வது நாளில் தொடர்ந்து ஒன்றரை நாள் வரையில் பட்டுப்புழு வாயால் பட்டுக்கூடு கட்டத் தொடங்கும். அதேபோல் முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடு கட்டும் வரை பட்டுப்புழு ஒவ்வொரு பருவங்களாக பிரிக்கப்படுகிறது. புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள் நோய்களை உண்டாக்கும் என்பதால் அவற்றை சிறந்த முறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழு வளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனி புழு வளர்ப்பு மனை அமைத்து பராமரிக்கிறோம். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவு கொடுப்போம்.

இதில் வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிக வேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணுபவையாக இருக்கும். பட்டுப்புழு உற்பத்தியில் வளர்ப்பு மனை மிகவும் முக்கியம். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் ஏற்றவாறு ஷெட்டினை அமைத்திருக்கிறேன். மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும்போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் உள்ளதா என்று கவனிப்பதோடு, 70-80 சதவீதம் ஈரப்பதம் உள்ளதா? என்பதை ஒவ்வொரு நாளும் கணக்கிடுவோம்.

அடுத்த மூன்று நாட்களில் பட்டுப்புழுக்கள் கூடுகளாக மாறி விட வேண்டும். அப்படி கூடுகள் கட்டாத பட்டுப்புழுக்களை தனியாக எடுத்துவிடுவோம். அதற்கு ஏதேனும் நோய்த் தாக்கியுள்ளதா என்பதைக் கவனிப்போம். நோய்த் தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட்டுவிடுவோம். பின்பு அதனை தூரமான இடத்தில் குழி தோண்டி புதைத்துவிடுவோம். இல்லையென்றால் எரித்துவிடுவோம்.

கட்டப்பட்ட கூடுகள் 6வது நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இந்த நேரத்தில் நலிந்த கூடுகளை அகற்றி விட்டு, பின்னர் கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். இதனை ஒவ்வொரு கூடாக எடுத்து மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் மழை, வெயில் படாமல் நிழலில் ஒன்று சேர்த்து மூட்டைகளில் சேகரித்து வைக்க வேண்டும். அறுவடை செய்த கூடுகளை மாலை, இரவு நேரங்களில் 7ம் நாளில் அனுப்ப வேண்டும். நாங்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

கடந்த 2016ம் ஆண்டு நடவு செய்த மல்பெரி செடிகள் அனைத்தையும் தற்போது வரை பராமரித்து வருகிறோம். மேலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மல்பெரிச் செடிகளை தொடர்ச்சியாக வளர்த்து அறுவடை செய்து கொள்ளலாம். முதலில் நடவு செய்த ஆறு மாதங்கள் பட்டுத் திரைகளை அறுவடை செய்யக்கூடாது. பின்னர் மாதத்திற்கு ஒருமுறை பட்டுச்செடிகளை அறுவடை செய்து பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளிக்கலாம்.இதுபோன்ற நவீன முறையில் பட்டுப்புழு வளர்த்தால் அதிக லாபம் ஈட்டி பொருளாதார அளவில் நாம் முன்னேறலாம். இதற்கு விவசாயிகள் முன்வந்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட வேண்டும். சில விவசாயிகள் பட்டு வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பட்டு வளர்க்க வைக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ளூர்களில் பட்டு கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும்.
தொடர்புக்கு:
விவசாயி: சுரேஷ்: 94430 48268.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை