மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

திருவொற்றியூர்: அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் நடைபெற்ற சென்னை வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில், கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு, தற்காப்பு கலை, ஓவியம் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

குறிப்பாக இப்பள்ளியில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு மாநில, மாவட்ட அளவில் பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளி பரிசுகள் வென்றுள்ளனர். அதேபோன்று, கடந்த ஆண்டு தர்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இந்நிலையில், அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் கடந்த 17, 18ம் தேதிகளில் சென்னை வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில், 23 குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 23 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

இப்போட்டியில், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 14 மற்றும் 17 வயதில் மாணவியர் பிரிவிலும், 17 வயது மாணவர் பிரிவிலும் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் மாணவ, மாணவிகள் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான குடியரசு தின பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு, பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை எல்.கமலா, உதவி தலைமை ஆசிரியை தேவி பாலா, மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் துரைராஜ், கண்டம்மாள், கோல்டன் மெல்பா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி