சுபிட்சம் கொடுக்கும் கதிர்குல்லா தோரணங்கள்!

நன்றி குங்குமம் தோழி

விழாக் காலங்களில் பண்டிகைனாலே நம்ம வீட்டு வாசலை அலங்கரிப்பதில் தோரணங்களுக்குதான் முதல் இடம். தோரணம் என்றாலே நமக்கு தெரிந்தது எல்லாம் மாவிலை மற்றும் தென்னங்குறுத்தோலைகளில் தயாரிக்கப்படும் தோரணங்கள்தான். ஆனால் இந்த தோரணங்கள் 3-4 நாட்களில் வாடிவிடும். இந்த வகை தோரணங்கள் கிடைப்பதும் பண்டிகை காலங்களில் மட்டும்தான். இப்படி இல்லாமல் தினந்தோறும் நம் வாசலை அலங்கரிக்கும் ஒரு தோரணம் அதுவும் வருடக் கணக்கில் வாடாமலும் இருக்கும். மேலும் நம் வீட்டிற்கு சுபிட்சத்தை அளிக்கக்கூடிய தோரணம் ஒன்று உள்ளது. அதுதான் நெல் மணிகளால் தயாரிக்கப்படும் நெற்கதிர் தோரணம்.

இத்தகைய நெற்கதிர்களை கொண்டும் நெல் மணிகளை பயன்படுத்தியும் பல வீட்டு அலங்கார கைவினைப் பொருட்களை ‘கதிர்குல்லா க்ராஃப்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கேரளாவில் பாலக்காட்டில் வசித்து வரும் கிரிஜா ராதாகிருஷ்ணன். ‘‘நெல்மணிகள் மகா லட்சுமியின் அம்சம். இத்தகைய நெல்மணிகளைக் கொண்டுதான் நாங்கள் தோரணம், கதிர்குல்லா, சுவரில் தொங்கவிடப்படும் கைவினைப் பொருட்கள், ஃபேன்சி விளக்குகள், நெல்மணி விநாயகர் போன்ற பல கைவினைப் பொருட்களை தயாரித்து வருகிறோம்.

மேலும் மயில் இறகுகளை பயன்படுத்தி ஆலவட்டம், நெத்திப்பட்டம் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நெத்திப்பட்டம் என்பது கேரளாவில் திருவிழா நாட்களில் யானைகளின் நெற்றியினை அலங்கரிக்க பயன்படுத்தப்படுவது. இதனை வீட்டில் சுவற்றினை அலங்கரிக்கும் பொருளாகவும் பயன்படுத்தலாம். கேரளாவில் பொதுவாக எல்லோருடைய வீட்டிலும், நெல்மணிகள் மற்றும் நெற்கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தோரணங்களை பார்க்கலாம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் நெற்கதிர்கள் லட்சுமியின் ஸ்வரூபம் என்பதால், வீட்டில் எப்போதும் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. அதற்காகவே அனைவரின் வீட்டிலும் நெற்கதிர் தோரணங்களை காணமுடியும். கதிர்குல்லா என்பதும் ஒரு வகையான தோரணங்கள்தான். இவையும் நெற்கதிர்கள் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதனை வீடுகளில் வாசற்படிக்கு உட்புறமாக தொங்கவிடுவார்கள்.

மகாலட்சுமியின் அம்சமான நெற்கதிரில் தயாரிக்கப்பட்ட கதிர்குல்லாவை வீட்டிற்கு உள்ளே தொங்க விடுவது வீட்டிற்கு ஒரு நல்ல பாசிடிவ் வைப்ரேஷனை தரும். வீட்டிற்கு சுபிட்சத்தையும் சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும். காலையில் கண் விழித்ததும் நெற்கதிரை பார்க்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் ஐதீகம். அதனால்தான் விஷு பண்டிகையின் போதும் கனி காணும் சம்பிரதாயத்தில் நெற்கதிர்களையும் கட்டாயம் வைப்போம்.

அதாவது, கேரள வருடப் பிறப்பான விஷு பண்டிகையின் போது முகம் பார்க்கும் கண்ணாடிக்கு வீட்டில் இருக்கும் தங்க செயினை அணிவித்து அதன் முன் முக்கனிகளான மா, வாழை, பலா மற்றும் பணம், நெற்கதிர்கள் போன்றவைகளை வைத்து அதில் கண் விழிப்பார்கள். அதையே தினமும் செய்ய முடியாது என்பதால், வீட்டில் வாசற்படிக்குள் நெற்கதிர்களை தோரணமாக ெதாங்கவிடுகிறார்கள். மேலும், திருமணம் போன்ற சுப விழாக்களில் மேடைகளை அலங்கரிக்கவும் கதிர்குல்லா தோரணங்களை கேரளாவில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றவர் தன் கலைக்கூடத்தில் உள்ள கலைப் பொருட்களைப் பற்றி விவரித்தார்.

‘‘கடந்த 20 வருடங்களாக நான் இந்த கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இந்தியா முழுவதிலும் இருந்து எங்களிடம் இந்த அலங்காரப் பொருட்களை வாங்குகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கும் நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம். நெல் மணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் மட்டுமில்லாமல் சுவர் ஓவியங்கள், கான்வாஸ் ஓவியங்கள் மற்றும் புடவையிலும் முரால் பெயின்டிங்கும் செய்து தருகிறோம்.

முழுக்க முழுக்க காட்டன் புடவைகளில் கைகளாலேயே நேரத்தியாக வரைந்து கொடுக்கிறோம். என்னிடம் தற்போது ஐந்து பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் பல பெண்களுக்கு இந்தக் கைவினைப் பொருட்கள் மூலம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்கால திட்டம்’’ என்கிறார் கிரிஜா ராதாகிருஷ்ணன்.

தொகுப்பு: எஸ்.விஜயஷாலினி

Related posts

வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!

இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதை திருப்பி செய்கிறேன்!

பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!