காஷ்மீரின் கதுவாவில் தீவிரவாதிகள் தாக்குதல் 5 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு பழிவாங்காமல் ஓய மாட்டோம்: ஒன்றிய அரசு திட்டவட்டம்

கதுவா: காஷ்மீரின் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு பழிவாங்குவோம் என்றும் தாக்குதலின் பின்னணியில் உள்ள தீய சக்திகளை இந்தியா வீழ்த்தும் என்றும் ஒன்றிய அரசு கூறி உள்ளது. காஷ்மீரின் கதுவா மாவட்டம் பட்னோட்டா பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் குழு பதுங்கியபடி கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியது. இதில், 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கதுவாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேரை இழந்ததற்காக மிகவும் வேதனை அடைகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. தீவிரவாதிகளை தேடும் பணி நடக்கிறது. நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் ராணுவம் உறுதியாக உள்ளது’’ என்றார்.

பாதுகாப்பு செயலாளரும் செய்தி தொடர்பாளருமான அரமனே தனது டிவிட்டர் பதிவில், தேசத்திற்காக 5 வீரர்களின் தன்னலமற்ற சேவை எப்போதும் நினைவுகூறப்படும். அவர்களின் தியாகம் நிச்சயம் வீண் போகாது. பழிக்கு பழி வாங்கப்படும். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீய சக்திகளை இந்தியா தோற்கடிக்கும்’’ என்றார். இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணி மிகத்தீவிரமாக நடக்கிறது. மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் கொண்டு வீரர்கள் தேடி வரும் நிலையில், ஹெலிகாப்டர், டிரோன் மூலமாகவும் தேடும் பணி நடந்து வருகிறது. 3 அல்லது 4 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது. வீரமரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மறைவுக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை