கருவூர்த் தேவர்

சங்ககாலச் சேரநாட்டுத் தலைநகரமாம் வஞ்சி எனப்பெறும் கருவூரில் பிறந்தவர் கருவூர்த் தேவர். சைவத் திருமுறைத் தொகுப்பான பன்னிரு திருமுறை வரிசையில் ஒன்பதாம் திருமுறையில் இவர் பாடியனவாகத் திருவிசைப்பாவில் பத்துத் திருப்பதிகங்கள் காணப் பெறுகின்றன. அவைதில்லைச் சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்டசோழீச்சரம், திருப்பூவனம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராஜராஜேச்சரம், திருவிடைமருது என்னும் திருத்தலங்களில் கோயில் கொண்டருளும் சிவபெருமானைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன. இப்பதிகங்களில் காணப்பெறும் குறிப்புகளைக் கொண்டு கருவூர்த் தேவரின் வரலாற்றை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.

அவர்தம் பாடல்களில் குறிப்பிடப்ெறாத பல செய்திகள் ‘‘கருவூர்ப் புராணம்’’ என்னும் நூலில் காணப்பெறுகின்றன. கருவூர்த் தேவர் பாடிய திருமுறைப் பாடல்களில், தன்னைப் பற்றிய பல குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். பாடல்களின் இறுதியில் தன் பெயரினைக் ‘‘கருவூரன்’’ என்றும், ‘‘கருவூரனேன்’’ என்றும், ‘‘கருவூர்’’ என்றும் கூறிக் கொள்கிறார். இவர் வேதியர்குலத்தில் பிறந்தவர் என்பதும் கலைகள் பலவற்றை அறிந்தவர் என்பதும் இவர் பாடல்களில் காணப்பெறும் குறிப்புகளால் அறியமுடிகிறது.

‘‘வெய்ய செஞ்சோதி’’ எனத் தொடங்கும் திருவிடைமருதூர் பதிகத்தில் எல்லோரும் கண்ணயர்ந்து தூங்கும் நடு இரவில் இறைவன் அம்மையப்பராக எழுந்தருளி காட்சி தந்து தம் உள்ளத்தில் புகுந்துஅருளிய சிவயோக அனுபவநிலையைக் கருவூர்த் தேவர் குறிப்பிடும் பாங்கால் அவர் துய்த்த சிவயோக நெறி பற்றி நம்மால் அறிய இயலுகிறது. மிகுந்த அழகும் நேர்த்தியும் உடைய சுடப்பெறாத பச்சைமண் பாத்திரம் எவ்வளவு எழிலுடையதாக இருந்தாலும் மழையின் சிறுதுளி பட்ட அளவிலேயே கரைந்து சிதையும்.

ஆனால், அப்பசுமண் பாத்திரம் நெருப்புச் சூளையில் இட்டுச் சுடப்பெற்ற பின்பு எத்தனை ஆண்டுகள் தண்ணீருள் அழுந்திடக் கிடந்தாலும் கரையாது பொலிவோடுதான் இருக்கும். அதுபோன்று பெண்களின் முயக்கத்தால் ஆழ்ந்து கிடக்கும் உரனில்லாத நெஞ்சம் சிறிய மழைத்துளியால் கரையும் மட்பாண்டம் போன்று சிறிய துன்பங்கள் வந்த அளவிலேயே நிலை கலங்கி அழியும்.

ஆனால், இறைவனின் திருவருட் பெருந்தீயில் ஒடுங்கி நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் உலகியலில் எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றால் நிலை கலங்காது காக்கும் அருட்டிறன் அந்த ஈசனுக்கு உண்டு என்பதை திருவிடைமருதூர் பதிகத்தில் மிகத் தெளிவாகக் காட்டுகிறார். தமிழாகிய அமுதம் உண்டு, சித்தராகி நோய், முதுமை முதலிய துன்பமின்றி இவ்வுலகில் நெடுங் காலம் வாழ்ந்தவர் என்பதனை, ‘அருமருந்தருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்த சொன்மாலை’, ‘ஆரணத்தேன் பருகியருந்தமிழ் மாலை’, ‘மகர வருங் காரணத்தின் நிலை பெற்ற கருவூரன் தமிழ்மாலை’ என்ற அவர்தம் வாக்கு வாயிலாகவே அறியலாம்.

பகற்பொழுதெல்லாம் இறைவனை இனிய தமிழாற் பாடிப் பரவுவதும், எல்லோரும் அயர்ந்து கண்ணுறங்கும் நள்ளிருட்பொழுதில் ஓரிடத்து அமைதியாக அமர்ந்து தம் உயிருக்கு உயிராகிய சிவபெருமானின் உருவத்தை அவர்தம் உள்ளத்தில் எழுதிப் பார்த்துச் சிவயோக நெறியில் இருப்பதே அவர்தம் அன்றாட அலுவல் என்பதையும் இடைமருது பதிகத்தில் கூறியுள்ளார்.
கி.பி.985 – 1014 வரை ஆட்சி செய்த முதலாம் இராஜராஜன் எடுப்பித்த தஞ்சை இராஜராஜேச்சரத்தையும் கி.பி. 1012 முதல் 1044 வரை ஆட்சிசெய்த கங்கைகொண்ட இராஜேந்திரசோழன் எழுப்பிய கங்கைகொண்ட சோழேச்சரத்தையும் நேரில் கண்டு மகிழ்ந்த கருவூர்த் தேவர் இவ்விரு கோயில்களிலும் திருவிசைப்பா பாடி அவைதம் பெருமைகளைப் பாரறியச் செய்துள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில், தான் திகழ்ந்தும் அரச பெருஞ்செல்வத்தை நுகரும் இன்பத்தினைச் சிறிதும் விரும்பாமல் கையில் திருவோட்டினை ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் எளிய வாழ்க்கையையே மேற்கொண்டொழுகினார். இவ்வாறு தெருவிற் பிச்சையேற்றுத் திரியும் கருவூர்த் தேவரின் உள்ளத்துயர்ச்சியினை நன்குணர்ந்த கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த மன்னவன் (இராஜேந்திர சோழனாக இருத்தல் கூடும்) அச்சிவ யோகியாரைப் பணிந்து அவர் அருளிய திருவிசைப்பா பாடல்களைக் கங்கைகொண்ட சோழேச்சரத்து இறைவன் திருமுன்னர் அன்புடன் ஓதி வழிபடும் வாயிலாக இறைவனின் திருவருளைப் பெற்று வேந்தர்கள் எல்லாம் அடிபணிய வீறுடைய பேரரசனாக விளங்கினான்.

இச்செய்தியினைக் கருவூர்த் தேவரே தம் பாடலில் சுட்டுகின்றார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஈசன் ஸ்பரிச தீட்சை அவருக்கு அருளியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருவூர்த் தேவரின் பத்துப்பதிகங்களில்ஒன்பது பதிகங்கள் சோழநாட்டுக் கோயில் களிலும் ஒரு பதிகம் பாண்டி நாட்டுத் திருப்பூவனத்திலும் பாடப்பெற்றவையாகும். கருவூர்த் தேவர் ராஜராஜ சோழனுக்குக் குருவாக விளங்கினார் என்பதோ, அவர்தான் தஞ்சைக் கோயிலுக்கு அட்டபந்தனம் செய்தார் என்ற தகவலோ அவர் பாடிய நூற்று மூன்று பாடல்களில் எங்கும் குறிப்பிடப்பெறவில்லை என்பது நோக்குதற் குரியதாகும்.

கருவூர்ப் புராணம் என்னும் ஏட்டுச்சுவடி நூல் சாலிவாகன சகாப்தம் 1540ல் அரங்கேற்றப்பெற்றது என்பதனை அந்நூலில் உள்ள குறிப்பால் அறிய முடிகிறது. இஃது ஆங்கில ஆண்டு கி.பி. 1618ஐக் குறிப்பதாகும். வடமொழியிலிருந்து தமிழில்யாக்கப்பெற்ற நூல் என்பதும் அந்நூலின்கண் காணப்பெறும் பாடலொன்றால் அறிய முடிகிறது. நூலைப் படைத்தவர் பற்றிய குறிப்பு இல்லை. கருவூர்ப் புராணம் இருபது சருக்கங்களுடன் அமைந்து கருவூர் ஆநிலை மகாதேவர் ஆலயச் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. இருபதாம் சருக்கமான ‘‘கருவூர்த் தேவர் கதிபெறுசருக்கம்’’ முழுவதும் அவ்வூரில் அந்தணர் குலத்துதித்த கருவூர்த் தேவரின் புராண வரலாறு பற்றிப் பின்வருமாறு பேசுகின்றது.

கருவூர்த் தேவர் வடபுலத்திலுள்ள பல நாடுகளுக்கும் சென்று காசி, காஞ்சி, காளத்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் முதலிய தலங்களையும் வழிபட்டு பாண்டிய நாட்டில் மதுரை, ராமேஸ்வரம் முதலிய தலங்களையும் வணங்கி பொருநை நதிக்கரையில் உள்ள குருகூரை அடைந்தார். குருகையில் திருமாலடியார்கள் இறைவனருளால் இவர் வரவையுணர்ந்து சிறப்பாகப் போற்றி வரவேற்றனர்.

கருவூர்த் தேவர் மகிழ்ந்து இவ்வூரில் நாயும் பரமபதம் பெறுக என அருளினார். பின்னர், திருச்செந்தூர் முருகனை வழிபட்டு கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய தலங்கள் சென்று திருநெல்வேலியை அடைந்து வழிபட்டார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள திருப்புடைமருதூரை அடைந்து ஈசனைப் போற்றி பாடல்கள் பல பாடி போற்றினார். அருகமைந்த ஒரு தலத்தில் தம் ஆணைப்படி வன்னி மரத்திலிருந்து மீன் மழை பொழியச் செய்து அற்புதம் காட்டினார். தஞ்சையில் சோழன் நிறுவிய ஆலயத்தில் பெருவுடையாரை பிரதிட்டை செய்யும்போது அட்டபந்தன மருந்து இறுகாமல் இருந்தது.

அப்போது அங்கு வந்த போகநாதர் காக்கையின் காலில் ஓலை எழுதிக் கட்டிச் செய்தியை கருவூர்த் தேவருக்கு அறிவித்தார். கருவூரார் எழுந்தருளி தம் வாய்த் தாம்பலத்தை அஷ்டபந்தன மருந்தில் உமிழ மருந்து இறுகிப் பெருவுடையார் லிங்கம் உறுதியாக நின்றது. திருவரங்கத்தை அடைந்துஅங்குள்ள ஒரு மங்கைக்கு உடலின்பம் அளித்து அரங்கரின் மாணிக்கமாலையை அவரிடம் பெற்று அப்பெண்ணுக்கு அளித்தார். உண்மை உணராத பாகவதர்கள் அம்மங்கையை இகழ்ந்து தண்டிக்க முற்பட்டனர்.

கருவூரார் வேண்டுகோளின்படி, திருவரங்கர் தாமே ஆபரணத்தை வழங்கியதாகக் கூறினார். பல தலங்கள் சென்ற கருவூரார் இறுதியாகக் கருவூர் வந்தடைந்து, தம்மை இகழ்ந்த அந்தணர்களுக்கு முன்பு அற்புதங்கள் காட்டி நிறைவாகப் பசுபதி நாதருடன் இரண்டறக் கலந்தார். இவ்வாறு நூற்றுஐம்பத்தேழு பாடல்களில் கருவூர்த் தேவர் கதி பெறு சருக்கம் விரித்துரைக்கப் பெறுகின்றது. திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் திருக்கோயில் ராஜகோபுர மேல்நிலைகளில் விஜயநகர அரசு கால வண்ண ஓவியக் காட்சிகள் பல உள்ளன. அவற்றில் ஒரு காட்சியில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகப் பெருமானை ஒருவர் அடுக்கு தீபம் காட்டி பூசை செய்ய, மரத்தின் அருகே கோலொன்றினை ஏந்தி நிற்கும் கருவூரார் ஒரு கையை உயர்த்தி சுட்டிக்காட்ட வன்னி மரத்திலிருந்து மீன்மழை பொழிகின்றது.

கருவூர்த்தேவர் காலடியில் ‘‘கருவூர்த் தேவர் கூற’’ என்ற தமிழ்ப் பொறிப்பும் இடம்பெற்றுள்ளது. இவ்வோவியக் காட்சிக்குக் கீழாக திருபுடைமருதூர் கோயில் முன்பு மருத மரத்தின்கீழ் நின்றவாறு கோலொன்றினைக் கையில் இடுக்கிக் கொண்டு புடைமருதூர் லிங்கப் பெருமானை கரம்கூப்பி வணங்கும் கருவூர்த் தேவரின் திருவுருவம் காணப்பெறுகின்றது.

இவ்விரு காட்சிகளிலும் தாடி, மீசை, சடை முடி ஆகியவை இன்றி இளம் வயதுக் கோலத்துடன் தலையிலும் கழுத்திலும் உருத்திராக்க மாலை தரித்தவராய் கருவூர்த் தேவர் காணப் பெறுகின்றார். கருவூர் புராணத்தில் கருவூரார் கதிபெறு சருக்கத்தில் கூறப்பெற்றுள்ள அர்சுன மரத்தின்கீழ் நின்றவாறு புடைமருதூர் ஈசன்பால் திருவிசைப்பா பாடினார் என்ற காட்சியும், வன்னி மரத்திலிருந்து மீன்மழை பொழியச் செய்த அற்புதத்தையும் இங்கு ஓவியத்தில் நாம் காண இயலுகிறது. கருவூர் புராணம் எழுதப் பெற்ற 17ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சார்ந்தவைதான் இவ்வோவியக் காட்சிகளும் பின்னாளில் தஞ்சை பெருவுடையார் கோயிலிலும் பிற இடங்களிலும் கருவூர்த் தேவரின் சிற்பங்கள் அமைத்தபோது, அவரைத் தாடி மீசையுடன் சடாபாரம் தாங்கியவராய் யோகத்தில் அமர்ந்த நிலையில் காட்டியுள்ளனர்.

தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ராஜராஜ சோழன் காலத்து ஓவியக் காட்சிகளில் ஒன்றில் காணப் பெறும் இருவரை முறையே ராஜராஜன் என்றும், கருவூர்த்தேவர் என்றும் கூறுவர். இது தவறு. அங்கு சனகாதி முனிவர் நால்வர் ஓவியங்களே உள்ளன. கருவூர்ப் புராணச் செய்திகளையும், கருவூர்த் தேவரின் திருவிசைப்பா பாடல்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது இதுவரை நாம் கண்டதில் பல வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். குறிப்பாகக் கருவூர்த் தேவரால் திருவிசைப்பா பாடல்பெற்ற தலங்கள் (தஞ்சை நீங்கலாக) எவையும் புராணத்தில் குறிக்கப் பெறவில்லை.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை