கருவறை முன் மண்டபம் ஒரு கலைக்கருவூலம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: போக நந்தீஸ்வரர் கோயில், நந்தி கிராமம், சிக்பல்லாபூர், கர்நாடக மாநிலம்.

காலம்: பொ.ஆ.8-ஆம் நூற்றாண்டி லிருந்து – 15-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பாணர், ராஷ்ட்ரகூடர், நுளம்பர், கங்கர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரம் போன்ற பெரும் அரச வம்சத்தினர் தத்தமது பாணிகளில் தம் கலைப்பங்களிப்புகளை இவ்வாலயத்தில் செய்துள்ளனர்.

இவ்வாலயத்தின் விமானம், முக மண்டபம், கருவறை, கல்யாண மண்டபம், கோயில் திருக்குளம் என ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு அரசாட்சிகளின் காலகட்டத்தின் சிற்பக்கலை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் சிற்பக்கலை நுணுக்கம் மிகுந்து சிறப்பிடம் பெற்றுள்ளது கருவறை முன் மண்டபம். இம்மண்டபத்தில் உள்ள தூண்கள் லயிக்க வைக்கும் பேரழகுடன் செதுக்கப்பட்டுள்ளன.

ஹொய்சாள சிற்பப் பாணியில் அமைக்கப்பட்ட இம்மண்டபத்தூண்களில் நுண்ணிய ஆபரணங்கள், ஆடை அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் அழகிய அப்சரஸ்கள், கருவறை ஆலய வாயிலின் இருபுறங்களிலும் விரிந்த விழிகள், கோரைப்பற்களுடன் வீற்றிருக்கும் துவாரபாலகர்கள், தூண்களின் வெளிப்புறமெங்கும் ஒரு அங்குல இடைவெளிகூட விடாமல் செதுக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கிளிகள், வியக்க வைக்கும் விதானம் என ஒவ்வொரு அம்சமும் காண்போரின் விழிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பழம்பெருமை வாய்ந்த ஆலயம் ஒரு கலைக்கருவூலம் என்றால் அது மிகையல்ல!

மது ஜெகதீஷ்

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்